முடிவின்றித் தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

மகிந்தவின் அமைச்சர்களுக்கு நிதியை நிறுத்தும் பிரேரணை நிறைவேற்றம் - அரச நிறுவனங்கள் முடங்கும் அபாயம்

மகிந்த - ரணில் சந்திப்பு
பதிப்பு: 2018 நவ. 30 13:20
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 01 05:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கான நிதியை இரத்துச் செய்யும் பிரேரணை 122 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30க்கு கூடியதும் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்தார். மகிந்த தரப்பு பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையைவிட்டு வெளியேறியுள்ளது. பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார். எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்த சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச, அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன. இதனையடுத்து சபாநாயகர் நாடாளுமன்றத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை ஒத்திவைத்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலாளருக்கு இலங்கை அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை நிறுத்துவதற்கான பிரேரணை 123 வாக்குகளினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், இன்று அமைச்சர்களின் நிதிப் பயன்பாடுகளும் நிறுத்தப்பட்டமையினால் அரச நிறுவனங்கள் செயலிழக்கும் ஆபத்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் அரச மற்றும் தனியார் வங்கிகளில் கூட நிதி்ப் பயன்பாட்டுக்கு நெருக்கடி உருவாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏலவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

ஆனால் இருவரும் பேசிய விடயங்கள் குறித்து எதுவுமே கூறப்படவில்லை. தற்போதைய அரசியல் நெருக்கடியை அடுத்து பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.