கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு

வவுணதீவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கைப் பொலிஸார் இருவரில் ஒருவரின் கை துண்டிப்பு - விசாரணை தொடர்கிறது

கொழும்பில் இருந்து பொலிஸ் மா அதிபர் பூஜித் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்
பதிப்பு: 2018 நவ. 30 17:04
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 01 05:01
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கைப் பொலிஸார் இரண்டுபேர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பொலிஸாரும் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இருவரின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸார் கொல்லப்பட்ட இடத்துக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
 
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் கொல்லப்பட்ட பொலிஸார் ஒருவரின் கையைத் துண்டித்துள்ளதாக முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் கொலையின் பின்னணியில் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

தனிப்பட்ட பகைமையின் காரணமாகவே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று மட்டக்களப்புக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை நீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தினேஸ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் இருக்கும் பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடிக்கு வழமைபோல் நேற்று வியாழக்கிழமை இரவு இருவரும் கடமைக்குச் சென்றுள்ள நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.