கொழும்பு நிர்வாகத்தின் பிடியில் இருந்து ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்தது வடமாகாணசபை-

அதிகாரங்களை செயற்படுத்த முடியாத நிலையில் முறைகேடு இடம்பெற்றமை எவ்வாறு?

ஆளுநர் விசாரணைக் குழுவை நியமித்தமை அரசியல் பின்னணியா?
பதிப்பு: 2018 டிச. 01 06:30
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 01 12:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் அதிகாரத்தின் கீழான மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை செயற்படுத்த முடியாத நிலையில் அல்லது அதிகாரங்கள் தட்டிப் பறிக்கப்படும் நிலையில் ஆட்சிக்காலத்தை வடமாகாண சபை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் மாகாணசபையின் மகளிர் விவகார அமைச்சினால் 320 இலட்சம் ரூபா நிதி முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றையும் ஆளுநர் அமைத்துள்ளார். முன்னாள் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் முன்வைத்த எழுத்து மூலமான குற்றச்சாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பற்றிய விபரங்கள் மற்றும் கொழும்பின் நிர்வாகக் கெடுபிடிகள், அழுத்தங்கள் தொடர்பாக சரியான தகவல்களை வெளியிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார்.

முன்னாள் வட மாகாண ஆளுநர் சந்திரசிறியினால் பல்வேறு அமைச்சின் திணைக்களங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி நிதி வடமாகாண ஆளுநர் சுயேட்சை நிதியத்தின் வங்கி கணக்கில் நிலையான வைப்பிலிடப்பட்டு அதன் வட்டிப் பணத்திலிருந்து சிறுநீரகம் மற்றும் இதய சத்திரசிகிச்சை போன்ற நோய்களினால் வடமாகாணத்தில் பாதிக்ப்பட்டவர்களின் மருத்துவ செலவிற்கு ஆளுநர் சுயேட்சை நிதியம் ஊடாக வழங்கப்பட்டு வந்தது.

ஆயினும் வடமாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதன் அனைத்து நிதிகளும் அந்தந்த திணைக்களங்களுக்கு மீளழிக்கப்பட்டது.

மாகாண கணக்காய்வு கூட்டத்தில் இந்த நிதியை பொருத்தமான திட்டங்களுக்கு மாகாணசபையின் அனுமதியுடன் செயற்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு மாறாக மகளிர் விவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆரம்பித்துள்ளதாக ஆளுநர் அலுவலக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எது எவ்வாறு இருந்த போதிலும் நிதிப்பயன்பாடு உட்பட மாகாணத்தின் அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசின் கொழும்பு நிர்வாகத்திடமே காணப்படும் நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடக்குக்கான முதலாவது மாகாணசபை கடந்த 5 ஆண்டுகள் தனது ஆட்சிகாலத்தை வெறும் நிறைவுசெய்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த வடமாகாண முதலமைச்சர் நிதியத்தை அமைப்பதற்கு கூட இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஐந்து வருடங்களுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த வடமாகாண முதலமைச்சர் நிதியத்தை அமைப்பதற்கு கூட இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சிற்கு பெருந்தொகை நிதி கையாடலுக்கு அனுமதி வழங்கப்பட்டதா என கேள்வி தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் விவகார அமைச்சின் ஆட்சிக் காலத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கென கடந்த 5 ஆண்டுகளில் 10 மில்லியன் ரூபா மாத்திரமே செலவழிக்கப்பட்டதாக அனந்தி சசிதரன் கூறியிருநதார்.

அதேவேளை, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பற்றிய விபரங்கள் மற்றும் கொழும்பின் நிர்வாகக் கெடுபிடிகள், அழுத்தங்கள் தொடர்பாக சரியான தகவல்களை வெளியிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.