இலங்கை அரசியல் நெருக்கடி தொடரும் நிலையில்

மாலைதீவு முத்தரப்பு ரோந்துப் பயிற்சியின் பின்னர் இந்தியக் கரையோர ரோந்துக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை

கூட்டுப் பயிற்சியுடன் கடற்பாதுகாப்பு ஆய்வுகளும் இடம்பெறும்
பதிப்பு: 2018 டிச. 01 21:22
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 10:40
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து அமைச்சரவையை மாற்றியது முதல் தொடர்ச்சியாக நீடித்து வரும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக அக்கறை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியக் கரையோர ரோந்துக் கப்பல்களான சி.ஜி.எஸ் சமர் (CGS Samar and Aryaman) மற்றும் அரய்மன் ஆகிய கப்பல்கள், கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. இந்திய, இலங்கை, மாலைதீவு முத்தரப்பு ரோந்துப் பயிற்சி மாலைதீவிலுள்ள டோஸ்டி கடற்பகுதியில் கடந்த 25ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் இந்தியாவின் இந்த ரோந்துக் கப்பல்கள், கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளன.
 
இந்தக் கப்பல்கள் இன்று சனிக்கிழமை முதல் ஏழாம் திகதி வரை இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த இரு கப்பல்களும் இலங்கையின் காலி, திருகோணமலைப் பிரதேசங்களில் உள்ள இலங்கைக் கடற்படைத் தளத்திற்கும் பயணம் செய்யவுள்ளது.

ஒரு வாரகாலம் இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நிற்கவுள்ள இரண்டு இந்தியக் கப்பல்களும் இலங்கையின் கரையோர ரோந்துக் கப்பல்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

அத்துடன் கரையோரப் பாதுகாப்பு ஆய்வு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் எனவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார்.

அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் செப்ரெம்பர் 13 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தன.

ஜப்பான் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் செப்டெம்பர் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தன.

அதேவேளை, திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய அமெரிக்காவின் ஆய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பா் இரண்டாம் திகதி ஆரம்பமாகியுள்ளன.

இந்த எண்ணெய்வள ஆய்வுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்தில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.