தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்பு

வவுனியாவில் அனுமதி பெறாது சிங்களவர்கள் வியாபார நிலையம் அமைத்துள்ளமை தொடர்பில் அதிருப்தி

நகரசபை மௌனம் காப்பது ஏன் என சமூகஆர்வலர்கள் கேள்வி
பதிப்பு: 2018 டிச. 02 21:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 22:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப் போரைத் தொடர்ந்து ஈழத்தமிழ் மக்களது பூர்வீக நிலங்களும் திட்டமிடப்பட்ட முறையில் சூறையாடப்பட்டுவரும் நிலையில் வவுனியா - யாழ்ப்பாணம் ஊடான ஏ9 வீதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் கடை அமைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதேச மக்கள் உட்பட சட்டத்திற்கு அமைவான முறையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்னர்.
 
ஏ9 வீதியில் தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிலையமொன்று அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சோளம் விற்பனையில் ஈடுபட்டிருந்த சிங்களவர்கள் அதற்குள் உணவுப்பொருட்கள் மற்றும் தேனீர் என்பன விற்பனை செய்யப்பட்டு வருவதாக பிரதேச வர்த்தகர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

எனினும் இந்த சட்டவிரோத வியாபார நடவடிக்கை குறித்து வவுனியா நகரசபை இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா மாவட்டம் உட்பட அனைத்து இடங்களிலும் வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இவ்வாறு கடை அமைத்துள்ளமை தொடர்பாக வவுனியா நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதா எனவும் வணிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியாவில் நகரசபையின் அசமந்தப் போக்கினால் சட்டத்திற்கு புறம்பான வகையில் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அவற்றை அகற்றுவதற்கு பெரும் முயற்சிகளை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வர்த்தக நிலையத்தை அமைப்பது மாத்திரமின்றி அதனுள் அனுமதி பெறாது சுகாதார சீர்கேடான முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பிலும் நகரசபை கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் உட்பட வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.