தீர்வின்றித் தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

மகிந்த பிரதமராகவும் 49பேர் அமைச்சர்களாவும் செயற்பட கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்தை அமைக்க ரணில் தரப்பு முயற்சி
பதிப்பு: 2018 டிச. 03 15:46
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 03 22:13
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மகிந்தராஜபக்ச பிரதமராகவும் அவருடை 49 அமைச்சர்களும் தொடர்ந்து பதவி வகிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர்கள் 122 பேர் இணைந்து கடந்த 23 ஆம் திகதி தாக்கல் செய்த ரிட் மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர். கடந்த 30 ஆம் திகதி முதலாவது விசாரணை இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை இரண்டாவது விசாரணை இடம்பெற்றபோது இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகிந்த தொடர்ந்தும் பிரதமராகப் பதவிவகிப்பார் என சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை கூறியிருந்தனர்.
 
இந்த நிலையில் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பான இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என்றும் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் வழங்கப்படும் எனவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

அதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஒக்ரோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இருந்த அரசாங்கம் மீண்டும் பதவியேற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்திற்கு அமைவாகவே சபாநாயகர் கரு ஜயசூரிய சபையை வழிநடத்தலாம் எனவும் அது குறித்து சட்ட ஆலோசனைகளில் சபாநாயகர் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தோ, மகிந்த தரப்பிடம் இருந்தோ உரிய பதில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.