வடமாகாணம்

மன்னார் போர்க்கால புதைகுழியில் இருந்து மேலும் பல எலும்புக் கூடுகள் மீட்பு - அகழ்வுப் பணி தொடர்கிறது

இடம்பெயர்ந்த தமிழர்களினுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம்
பதிப்பு: 2018 டிச. 10 22:07
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 11 09:28
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் நகர நுழைவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட போரக்கால மனிதப் புதைகுழியில் இருந்து இன்று வரை 266 எலும்புகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் 260 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை 114 ஆவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. கடந்த வாரம் மன்னார் சதொச மனிதப் புதைகுழியிலிருந்து விலங்கிடப்பட்டவாறு மீட்கப்பட்ட மனிதக் கால் எலும்புகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி இலங்கைப் பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் புதைகுழியிலிருந்து தங்க முலாமிடப்பட்ட பெண்கள் அணியும் மோதிரம் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.
 
அத்துடன் கால் விலங்கிடப்பட்ட எலும்புகளும் மோதிரம் போன்ற தடயங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இதுவரை மீட்கப்பட்ட எலும்புகளை ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கைப் பொலிஸார் தாமதிப்பது தொடர்பாக மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு பிற்பகுதியில் கடும் யுத்த சூழ்நிலைகளின்போது இலங்கை இராணுவத்தினரால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல தமிழ்க் கிராமங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.

முருங்கன், நானாட்டான், மடு, அடம்பன், ஆட்காட்டிவெளி, தேனுடையான் மற்றும் பாப்பாமோட்டை உட்பட பல தமிழ்க் கிராமங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையான தமிழ்க் குடும்பங்கள் உயிர் அச்சுறுத்தலினால் தலைமன்னார், பேசாலை பகுதிகளின் ஊடாக இந்தியாவிற்குப் படகுகள் மூலம் இடம்பெயர்ந்து செல்வதற்கு முற்பட்டனர்.

இவ்வாறு பல தமிழ்க் குடும்பங்கள இந்தியா செல்வதற்காக மன்னார் நகரை நோக்கி வருகை தந்திருந்தனர். அவ்வாறு வருகை வந்திருந்த பல தமிழ்க் குடும்பங்கள் மன்னார் நகரை அடைவதற்கு முன்னரே காணாமல் போயிருந்தனர்.

வேறு பலர் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுமிருந்தனர்.

ஆனால் இன்றுவரை இவர்களின் நிலை குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது மன்னார் சதொச புதைகுழியிலிருந்து மீட்கப்படும் எலும்புகள் அனைத்தும் இந்தியாவிற்கு இடம்பெயர முற்பட்ட காணமல் ஆக்கப்பட்ட தமிழர்களினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தப் புதைகுழியிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.