தேர்தல் குளறுபடிகள், வாக்கு எந்திர மோசடிக்கு மத்தியிலும் மக்கள் கொடுத்த அடி!

இந்திய ஒன்றியத்தின் 5 மாநிலத் தேர்தல் - பெரும் பின்னடைவைச் சந்திக்கிறது பாஜக!

15 ஆண்டுகள் ஆண்ட சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸிடம் தோல்வியடைந்தது பாஜக
பதிப்பு: 2018 டிச. 11 12:17
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: டிச. 11 13:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
2019 இல் இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறச் சூழலில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பின்னடவைச் சந்தித்திருகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கிறது. 15 ஆண்டுகளாக கோலோச்சிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் முந்தையக் காலக்கட்டத்தை விட குறைந்த எண்ணிகையிலான இடத்தையே பாஜக பெற்றுள்ளது. வடகிழக்கு மாகாணத்தில், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. 1956 முதல் 1986 வரை கிளர்ச்சிப் படையாக இருந்து, இந்திய ஒன்றிய அரசுடனான ஒப்பந்தத்தில் பேரில் தேர்தல் பாதைக்கு திரும்பியது இக்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது!
 
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நான்கு நாட்களுக்கு முன் நடைப்பெற்றது. 2019இல் நடைப்பெறவிருக்கிற இந்திய ஒன்றிய அரசின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற மாநிலத் தேர்தல்கள் என்பதால் அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பாஜக கட்சி அனைத்து இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்திருப்பதோடு, பெரும்தாக்கம் செலுத்தி வந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தாம் மற்றும் சத்தீஷ்கரில் தோல்வி அடைந்திருப்பது பல செய்திகளை சொல்வதாக அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல ஆண்டுகளாகவே பெரும் தாக்கம் செலுத்தி வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் முந்தையக் காலக்கட்டங்களை விட குறைந்த எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பாஜக பெற முடிந்திருக்கிறது என்பதும் இங்கு உற்று கவனிக்க வேண்டிய செய்தியென தமிழக மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு கருத்துத் தெரிவித்தார்.

மிசோரம் மாநிலத்தில், எதிர்பார்த்தபடியே பாஜக, காங்கிரஸ் இருகட்சிகளுமே மாநில கட்சியான் மிசோ தேசிய முன்னணியிடம் தோல்வியைக் கண்டுள்ளனர். கடந்த 2008 முதல் லால் தன்வாலா தலைமையில்தான் இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இவர் ஐந்து முறை முதல்வராகி ஒரு சாதனையே படைத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கிறது. 2013 தேர்தலில் 50 இடங்களை பாஜக கைப்பற்றி இருந்தது, ஆனால், இம்முறை 18 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதேபோன்று, காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இம்முறை காங்கிரஸ் முன்னணி பெற்றிருக்கிறது.

200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த முறை 164 இடங்களை பெற்று பெரும் பலம் பெற்றிருந்த பாஜக, இம்முறை 82 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, கடந்தத் தேர்தலில் 165 இடங்களை பெற்றிருந்தது. 2018இல் 108 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

வேறு மாநிலங்களைக் காட்டிலும் மத்தியப் பிரதேச மாநிலமே பாஜகவின் கோட்டையாக திகழ்ந்ததும், அங்கு பாஜக சந்தித்திருக்கும் பின்னடைவு வருங்கால அரசியல் நிகழ்வுகளில் பெரும்தாக்கம் கொண்டவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2014இல் உருவாக்கப்பட்ட தெலுங்கான மாநிலத்தில் 2014-2018 வரை ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. 2019 வரை ஆட்சிக்கு வழி இருந்த பொழுதும் ஓராண்டு முன்னமே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார் சந்திரசேகர் ராவ் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.