இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக திகழும்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது

அரசியல் நெருக்கடிக்கு சுயஇலாபத்தை தேடும் முயற்சியே இதுவென குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 டிச. 12 09:31
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 12 09:41
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். இதனடிப்படையிலேயே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இதுவும் அரசியல் சுயஇலாபத்தை தேடும் ஒரு நடவடிக்கையே என்று விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறுதான் கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாயக மக்கள் உட்பட கடந்த 1 வருடத்துக்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகளுக்கும் மைத்திரிபால சிறிசேன போலி வாக்குறுதி வழங்கி ஏமாற்றியிருந்தார் என பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.