போர்க்காலத்துக்குரியது என நம்பப்படும்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஐ.நா பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரி போராட்டம்

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து பெருந்திரளானோர் பங்கேற்பு
பதிப்பு: 2018 டிச. 12 13:30
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 12 17:09
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் - மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்காலத்திற்குரியதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை, ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். தமிழர் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தமிழ் மக்களினுடையது எனவும், இது குறித்து மேலதிக ஆய்வுகளை ஐ.நா மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களின் பாதுகாப்பை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு மகஜர் ஒன்றும் நேரடியாக அனுப்பப்படவுள்ளது. அந்த மகஜர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

தமிழ் இன அழிப்பு விடயத்தில் ஐ.நா நீதியை நிலைநாட்ட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.