இலங்கை அரசியல் நெருக்கடிக்குப் பின்னரான நிலை

அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் - எரான் விக்ரமரத்ன தகவல்

ஜனவரியில் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என உறுதி
பதிப்பு: 2018 டிச. 17 11:41
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 17 22:57
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் இரு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியினால் கடந்த 50 நாட்களாக நிலவிவந்த அரசியல் நெருக்கடி, ரணில் விக்கிரமசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்புடன் சற்றுக் குறைவடைந்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதுடன் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு சமா்ப்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
 
அடுத்த வருடத்துக்கான முழுமையான வரவுசெலவுத்திட்டம் முதல் வருடத்தின் இறுதிக் காலாண்டில் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுவது வழமை.

எனினும் இலங்கையில் கடந்த 50 நாட்களாக நிலவிய அதிகாரப் போட்டியினால் அரசியல் நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதனால் வரவு செலவுத்திட்டம் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்தே வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தற்போது கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையில் பிரதமர் நியமனம் இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதிய அமைச்சரவை உருவாக்கம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த மைத்திரி - ரணில் கூட்டரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீரவிற்கு அதே அமைச்சுப் பதவி வழங்கப்படுமா அல்லது இலங்கையின் முன்னாள் நிதியமைச்சராக இருந்து பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டினால் பதவி விலக்கப்பட்ட ரவி கருணாநாயக்கவிற்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பு காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.