இலங்கையில் தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டுவரும்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பிரச்சனை - மக்களை வெளியேற்றும் இனவாத செயற்பாடா? அருட்தந்தை சத்திவேல்

தீர்வு வழங்க வேண்டிய பெரும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளதென சுட்டிக்காட்டுகின்றார்
பதிப்பு: 2019 ஜன. 05 13:32
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 06 10:01
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#TeaWorkers
#Shaththivel
#Salary
இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் மக்களது கோரிக்கையைத் தட்டிக்கழிப்பதானது பெருந்தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் ஒரு இனவாத நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களது பேராட்டம் தொடர்பாக கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
தோட்டத் தொழிலாளர்களது போராட்டம் குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

பெருந்தோட்ட மக்களுடைய சம்பளப் பிரச்சனை என்பது தனியே சம்பளப் பிரச்சனையாக உற்றுநோக்குவது பிழையான விடயம். அது அவர்களது வாழ்க்கைப் பிரச்சனை. சம்பளம் என்பது வாழ்வுக்கானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளம் அதற்காக தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற சம்பளம் அவர்களது வாழ்க்கைக்கான சம்பளமாக இல்லை. மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற ஒரு சம்பளத் தொகையை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தினர் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

சம்பளம் வழங்க முடியாது என்றும் தமக்கு நட்டம் என்றும் அவர்கள் கூறுவது நிர்வாகம் தொடர்பான பிரச்சனையே தவிர தொழிலாளர்களுடைய பிரச்சனை அல்ல.

ஒவ்வொரு ஒப்பந்த காலத்தின் போதும் அவர்கள் நட்டம் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு நீண்டகாலமாக இவர்கள் தொடர்ச்சியாக நட்டம் என்று கூறுவதாக இருந்தால் ஒரு முதலாளித்துவ நிர்வாகம் தொடர்ச்சியாக நட்டம் என்று கூறி அதனை நடத்துவது கிடையாது. நட்டம் என்று நினைத்தால் கைவிட்டுவிடுவார்கள். ஆகவே இவர்களுக்கு நட்டம் இல்லை. நட்டம் என்று கூறி தொழிலாளர்களை ஒடுக்குகின்றார்கள் என்பதே இங்கு புலனாகின்றது. தொழிலாளர்களை ஒடுக்குவதன் மூலம் இரண்டு விதமான செயற்பாட்டை இவர்கள் செய்ய நினைக்கின்றார்கள்.

அங்கிருக்கின்ற தொழிலாளர்களை அவர்கள் குறைக்க நினைக்கின்றார்கள் தற்போது அங்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் தொழிலாளர்கள் மாத்திரமே இருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. கம்பனிகளுக்கு இந்தப் பெருந்தோட்டங்கள் கையளிக்கப்பட்டபோது கிட்டத்தட்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் தொழிலாளர்கள் அங்கு இருந்தார்கள். இப்போது ஒரு இலட்சத்து அறுபதாயிரம் தொழிலாளர்கள் மாத்திரமே இருக்கின்றார்கள் என்றால் அதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெருந்தோட்டங்களில் இல்லை. அவர்களது குடும்பங்களும் அங்கு இல்லை என்பது தெரிகின்றது. எனவே இந்தப் பெருந்தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றுவது இனவாத நோக்கத்தோடு செயற்படுகின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அடுத்ததாக பெருந்தோட்டங்களுக்குள்ளே முள்ளுத் தேங்காயை அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு சிறிய தொகையிலான தொழிலாளர்களே தேவைப்படுகின்றார்கள். அவர்களை வைத்துக்கொள்வதற்கே முயற்சிகள் இடம்பெறுகின்றன. பெருந்தோட்டம் என்று கூறுகின்றபோது தேயிலைத் தொழிலை உல்லாச பிரயாண தொழிலோடு வைத்துக்கொண்டு இலாபமீட்டுகின்ற இந்த முள்ளுத்தேங்காய் தொழிலை உற்பத்தி செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள். எனவே இனவாத நோக்கில் அங்கிருக்கின்ற மக்களை வெளியேற்றுவதும் ஒரு நோக்கமாக இருக்கின்றது.

முதலாளித்துவத்தின் அடிப்படையில் அவர்கள் எல்லாவற்றையும் மக்களாக இருந்தாலென்ன மண்ணாக இருந்தாலென்ன தொழிலாக இருந்தாலென்ன இவை எல்லாவற்றையும் பணத்தின் அடிப்படையிலேயே உற்றுநோக்குவார்கள். அவர்களுக்கு பணமே முக்கியம். இதனால் தான் இந்த தொழிலாளர்களது சம்பளப் பிரச்சனை என்பது தனியே சம்பளப் பிரச்சனை என்பதைத் தவிர்த்து வாழ்வுப் பிரச்சனையாகவும் காண்கின்றோம்.

இப்போதிருக்கின்ற இந்த தொழிற்சங்கங்கள் சம்பள பிரச்சனையை மட்டும் பார்க்கின்றனர். அவர்களுடைய வாழ்வுப் பிரச்சனையைப் பார்க்க மறுக்கின்றனர். மலையகத்தில் இருக்கின்ற கட்சிகள் கூட அங்கிருக்கின்ற பிரச்சனையை வாழ்வு தொடர்பான மக்களுடைய அடையாளம் தொடர்பான மக்களுடைய தேசியம் தொடர்பான பிரச்சனையாக உற்றுநோக்காமல் வெறுமனே தமது வாக்கு வங்கிக்கான ஒன்றாகவே பார்க்கின்றனர்.

இது தான் இங்கிருக்கின்ற சிக்கல். எனவே தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்ற சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் ஆயத்தமாக இல்லை. அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தொழிற்சங்கங்கள் ஆயத்தமாக இல்லை. கட்சிகளும் அதற்குத் தயாரில்லை.

இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகின்றீர்களா?

அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கையிலே இறங்க வேண்டும். கடந்த கால வரலாற்றை நோக்குகின்ற போது 1984 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன தலையிட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து சம்பள அதிகரிப்பையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார். அதேபோன்று பிரேமதாசவும் செயற்பட்டிருக்கின்றார். சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் கூட அதேபோன்று செயற்பட்டிருக்கின்றார் என்பதை கடந்த கால வரலாறு கூறுகின்றது.

தற்போது இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருக்கும் அவருடைய கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான தொழிற்சங்கமொன்று ஒப்பதந்தத்திலே கையொப்பமிடுகின்ற ஒரு தரப்பாக இருக்கின்றது.

எனவே தமது தொழிற்சங்கம் சார்ந்தும் கட்சியின் நலன் சார்ந்தும் இந்த தேர்தல் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் இதனைக் கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எனவே அரசாங்கம் இதில் தலையிடும் என்று நம்புகின்றேன்.

எனவே நான் ஏற்கனவே கூறியதைப் போன்று கடந்த காலத்திலும் சரி தற்போதும் சரி இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் முதலாளித்துவ அரசாங்கமே.

எனவே அவர்கள் இந்தக் கம்பனிகளைப் பாதுகாப்பதற்காக தான் செயற்படுவார்கள். தொழிலாளர்களோ அல்லது தொழிலாளர் சார் அமைப்புக்கள் வெற்றிபெறுவதையோ இவர்கள் விரும்புவது கிடையாது.