கடும் மழை, வெள்ளத்தினால்

வடக்கில் 43 ஆயிரத்து 48 ஏக்கர் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது- கிளிநொச்சியில் 28 வரையான குளங்கள் பகுதியளவில் சேதம்

புனரமைப்புக்காக 31 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பீடு
பதிப்பு: 2019 ஜன. 06 10:01
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 06 22:28
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Mullaituvu
#Flood
#Cultivation
வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்துள்ள நிலையில், சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ள நிலையில், வெள்ள அனர்த்தத்தினால் 43 ஆயிரத்து 48 ஏக்கர் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக, இலங்கை கிராமிய பொருளாதார விவசாய மற்றும் கால்நடை கமத்தொழில் நீர்ப்பாசன அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்றுச் சனிக்கிழமை முற்பகல் 10.30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
 
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சரக அதிகாரிகள் வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் நேரில் சென்று பார்வையிட்டதாக கிளிநொச்சி செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 43 ஆயிரத்து 48 ஏக்கர் பயிர்செய்கை நடவடிக்கை அழிவடைந்துள்ளதாகவும், இதில் பத்து கெக்டேயர் சோளச்செய்கை 1500 ஏக்கர் நிலக்கடலை என்பனவும் அழிவடைந்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை தொடர்பான முழுமையான மதிப்பீடுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்த அமைச்சின் செயலாளர், கிளிநொச்சியில் 28 வரையான குளங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு புனரமைப்புச் செய்யப்பட்ட 10 குளங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றை அபிவிருத்தி செய்வதற்காக 31 மில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 குளங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் கிளிநொச்சி செய்தியாளர் குறிப்பிட்டார்.