ஈழத்தமிழ் மக்களது பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு

கட்சியின் முழுமையான அதிகாரங்களையும் கையளிப்பாரா என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி
பதிப்பு: 2019 ஜன. 06 10:38
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 06 10:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#TamilUnitedLiberationFront
#Anandasangaree
#Vigneswaran
ஈழத்தமிழ் மக்களது பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்போவது யார் என்ற கேள்வி தற்பாது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளில் ஒன்றான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
 
சுயநலத்தை உதறித் தள்ளிவிட்டு, ஒன்றுபட்டு செயற்பட வருமாறு, அக்கறை கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை என்றும் நடைமுறைகளை அவதானிக்கும்போது மேலும் எத்தனை தீபாவளிகள் தாண்டும் என தெரியவில்லை என்றும் சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாது, 60 ஆண்டுக்கு மேல், மக்கள் சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த தான், தனது அரசியலில், இன்றைய நிலைப்பாட்டை, மக்களுக்குத் தெளிவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரியில், 60 ஆண்டுகள், விக்னேஸ்வரனை தான் அறிவதாகவும் அவரைப் பற்றிய தப்பான அரசியல் விமர்சனங்கள் வந்தபோது, அவற்றையும் தான் கண்டித்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், ஏனைய சிலர், தொடர்ச்சியாக செய்தது வருவதுபோல, அவர் நம்மினத்தை விற்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டார் என்பதை தான் நன்றாக அறிவதாகவும் கூறியுள்ளார்.

இன்றுவரை தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்து, எல்லா வட்டாரங்கள், தொகுதிகளிலும் போட்டியிடும் தீர்மானத்துடனேயே உள்ளது என்றும் அப்படி இருப்பதற்கு நியாயப்படுத்தகூடிய பல காரணங்கள் உண்டு என்பதை, சகல கட்சிகளின் தலைவர்களும், தம் தம் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டும் என்றும், ஆகவே, சி.வி.விக்னேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை ஏற்கும் பட்சத்தில், அவருடன் இணைந்து செயற்பட, தாங்கள் அனைவரும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதே ஏற்பாட்டைதான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், விக்னேஸ்வரனுக்கு, கட்சியின் தலைவர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, தன்னைப் பொறுத்த வரையில், பிரச்சினை தீரவேண்டும் என்பதேயொழிய, எதுவித பதவியையும் இலக்கு வைத்து இன்றுவரை செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறி, நல்லெண்ணம் படைத்த அனைவரையும் ஒன்று சேர வருமாறு அழைப்பதாகவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் இந்த தீர்மானத்தை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் முழுமையான அதிகாரங்களையும் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிப்பதற்கு ஆனந்த சங்கரி தயாரா என்பது குறித்து அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் காலங்காலமாக தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு தலைமைப் பதவிக்காக போராடும் அரசியல்வாதிகளை விடுத்து மக்களுக்கான தீர்வைப் பெறுவதற்கு அனைவரும் ஒண்றினைவது வரவேற்கத்தக்க விடயம் என ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.