ஆளுநர் நியமனம்

வடக்குக்கு தமிழரை ஆளுநராக நியமிப்பது தொடர்பில் பேச்சு? சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரை நியமிப்பதற்கு மைத்திரி விருப்பம்

விக்கினேஸ்வரன் தவராசா மற்றும் வரதராஜப்பெருமாள் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்
பதிப்பு: 2019 ஜன. 07 10:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 10:32
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#NothernProvince
#Governer
இலங்கையில் கடந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதாக பல தரப்பினரும் குற்றம்சுமத்திவரும் நிலையில் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பிரதமர் மாற்றத்தில் ஏற்பட்ட குழறுபடியை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மாகாண ஆளுநர்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்தனர். இருந்த போதிலும் வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் இதுவரை நியமிக்கப்படாத நிலையில் அப் பதவிக்கு தமிழர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந் நிலையில் வடமாகாண ஆளுநராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி திட்டமிட்டிருந்ததாகவும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

அத்துடன் வடமாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்தினவையும் நியமிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டிருந்ததாகவும் இவர்களை விட கலாநிதி விக்கினேஸ்வரன் வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆகியோரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருந்தபோதிலும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்கு சிறிசேன விருப்பம் கொண்டிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் ஒரு சில நாட்களில் வடமாகாணம் உள்ளிட்ட வெற்றிடமாக உள்ள ஏனைய நான்கு மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு அரசியல் செய்தியாளர் குறிப்பிட்டார்.

மாகாண ஆளுநர்களாக பதவி வகித்த அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு மைத்திரிபால சிறிசேன கடந்த 31ஆம் திகதி அறிவித்திருந்தார். இதற்கமைய மறுநாள் ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.