வடமாகாணத்தின்

வவுனியா - புதூர் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு - சந்தேகத்தில் பெண் உட்பட இருவர் கைது

தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தகவல்
பதிப்பு: 2019 ஜன. 07 13:52
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 14:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#Srilanka
#Police
#Weapons
வவுனியா - புதூர் பகுதியில் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கடந்த இரண்டாம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், வவுனியா - நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது சந்தேகநபர் தப்பியோடிய நிலையில், அவர் கொண்டு சென்ற பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்து கடந்த 1 ஆம் திகதி அப்பகுதி முழுவதும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் புதூர் முதல் கனகராயன்குளம் வரையான பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வீட்டில் வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2 ஆம் திகதி 20 வயதான ஜெகதீஸ்வரன் கஜேந்திரன் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன் சந்தேகத்தின் அடிப்படையில் வீடொன்றில் விசாரணைக்கு பொலிஸார் சென்றபோது கணவன் வீட்டில் இல்லை எனவும் எங்கே போனார் எனவும் தெரியாது என்று கூறிய பத்து வயது பெண் பிள்ளையின் தாயாரான 35 வயதான ஸ்ரீகாந்த் தர்சினி என்ற பெண்ணைப் பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரது 10 வயது மகளையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக வவுனியா செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நெடுங்கேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞனைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.