இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோணமலை விமான நிலையத்தில்

வெளிநாட்டு விமானம் தரையிறங்கியது - இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி- ஆனாலும் விசாரணைக்கு ஏற்பாடு

கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு, சந்தேகம்
பதிப்பு: 2019 ஜன. 07 14:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 15:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Singapore
#India
#Trinco
தமிழ் பேசும் தாயகப் பகுதியான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சீனக்குடா விமான நிலையத்திற்குச் சென்ற சர்வதேச விமானம் ஒன்று, அங்கிருந்து நேரடியாகச் சிங்கப்பூர் நாட்டுக்குச் சென்றமை தொடர்பாக விசாரணைகள் நடத்தவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சிவில் விமானச்சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் குறித்த விமானம் இலங்கையின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மூன்றாம் திகதி வந்ததாகவும் பின்னர் அங்கிருந்து சீனக்குடா விமான நிலையத்திற்குச் செல்வற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருந்ததாகவும் கொழும்பு அரசியல் தகவலகள் கூறுகின்றன. குறித்த விமானத்தில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த வர்த்தக முதலீட்டாளர்கள் ஐந்து பேர் இருந்துள்ளனர்.
 
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் இவர்களுடன் உரையாடியுள்ளனர்.

ஆனால் திருகோமலை - சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து நேரடியாக சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதியை இலங்கைக் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் வழங்கவில்லையென இலங்கைப் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சு கூறியுள்ளது.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சர்வதேச விமானமொன்று இலங்கையையில் இருந்து மீண்டும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்தே வெளியேற முடியும்.

ஆனால் தனியாருக்குச் சொந்தமான வெளிநாட்டு விமானமொன்று விதிமுறைகளுக்கு மாறாக திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளது.

இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறும் என இலங்கைப் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றன.

பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் இந்த ஆய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய வலயங்களில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகளை ஆராயவுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான Eastern Echo DMCC உடன் மே மாதம் இலங்கை ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.

இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ச்சுன ரணதுங்க மே மாதம் 30 ஆம் திகதி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்த எண்ணெய்வள ஆய்வுக்கு இந்திய மத்திய அரசு அமெரிக்காவுக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. அத்துடன் திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் பென்ரகன் நிர்வாகத்தின் மேற்பார்வையில் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானம் ஒன்று சிங்கப்பூர் நாட்டுக்குச் சென்றமை குறித்து இலங்கை அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.