வடமாகாணத்தின்

மன்னார் - முள்ளிக்குளம் மக்கள் நிர்க்கதி, அரச அதிகாரிகளால் ஏமாற்றப்படுகின்றனர் - அருட்தந்தை லோரன்ஸ் லியோன்

தமது நிலங்களில் சுதந்தரமாக நடமாட முடியாதுள்ளதாக மக்கள் ஆதங்கம்
பதிப்பு: 2019 ஜன. 08 11:27
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 08 11:36
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#Mullikkulam
#Land
#Tamils
இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பை அடுத்து தமது சொந்த நிலங்களிலிருந்து இடம்பெயர்ந்த மன்னார் முள்ளிக்குளம் தமிழ்க் கிராம மக்கள் இதுவரை முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை எனவும் பகுதியளவில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாததனால் மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை வணபிதா லோரன்ஸ் லியோன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசாங்கத்தினாலும் அரச அதிகாரிகளினாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதாக கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின்போது சுட்டிக்காட்டினார்.
 
கூர்மை செய்தித் தளத்திற்கு அருட்தந்தை வழங்கிய நேர்காணல் வருமாறு,

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டிலிருந்த முசலி மற்றும் சிலாவத்துறை பிரதேசங்களை மீட்கும் படை நடவடிக்கை கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் முசலிப் பகுதியைச் சேர்ந்த முள்ளிக்குளம் தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் முள்ளிக்குளத்திலிருந்து இடம்பெயர்ந்தனர்.

பின்னர் முள்ளிக்குளம் கிராமத்தை முழுமையாக ஆக்கிரமித்த இலங்கைக் கடற்படையினர் அங்கு பாரிய கடற்படை முகாம் ஒன்றை அமைத்து தொடர்ந்து அங்கு நிலைகொண்டனர்.

அங்கிருந்து வெளியேறிய பொதுமக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகாமையிலுள்ள காயாகுழி, மலங்காடு பகுதிகளில் அரச அதிகாரிகளினால் தற்காலிகமாக குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் தற்போது தமது பூர்வீக கிராமத்தில் தம்மைக் குடியேற்றுமாறு கோரி முள்ளிக்குளம் தமிழ் மக்கள் பாரிய உண்ணாவிரத போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.

குறித்த போராட்டத்தை அடுத்து இலங்கைக் கடற்படையினர் முள்ளிக்குளம் கிராமத்தின் முன்பகுதியிலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பினை முதற்கட்டமாக விடுவித்திருந்தனர்.

இத்தருணத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு சொந்தமானவர்கள் அப்பகுதிகளில் மீளகுடியமர்ந்தனர்.

எனினும் ஆரம்பத்தில் கூறியவாறு முள்ளிக்குளம் கிராமத்தின் மிகுதிப் பகுதிகளை இலங்கைக் கடற்படையினர் பொது மக்களிடம் கையளிப்பதற்கு பின் வாங்குவதாகவும் இது குறித்து தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை எனவும் நிரந்தர வீடு, மின்சார வசதி, குடிநீர் மற்றும் உள்ளக வீதிகள் தொடர்பில் அதிகாரிகளால் கூறப்பட்டவாறு இதுவரை எதுவும் நடைபெறவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இலங்கைக் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் காயாகுழி, மலங்காடு பகுதிகளில் வசிக்கும் முள்ளிக்குளம் மக்களும் தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடியை மேற்கொள்ள முடியாது பெரிதும் அல்லலுறுவதாக குறிப்பிட்டனர்.

தற்போது முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் மீது இலங்கை கடற்படையினர் பல்வேறு கெடுபிடிகளை விதிப்பதாகவும் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறு செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முள்ளிக்குளம் மக்களின் முழுமையான மீள்குடியேற்றத்தில் பல மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முள்ளிக்குளம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தெரிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது முள்ளிக்குளம் மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக அருட்தந்தை குறிப்பிட்டார்.