இலங்கை இராணுவத்தின்

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் - முன்னாள் போராளிகள் இருவருக்கு சிறைத்தண்டனை

சிறைத்தண்டனைக் காலம் நிறைவடைந்துள்ளதால் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவு
பதிப்பு: 2019 ஜன. 17 15:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 17 16:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Anuradhapura
#Attack
#LTTE
#Srilanka
இலங்கை இராணுவத்தின் அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், இராணுவத்தைக் கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, அனுராதபுர மேல்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் 24 பேர் கொண்ட கரும்புலிகள் அணி கொமாண்டோ தாக்குதலை நடத்தியிருந்தது.
 
இந்தத் தாக்குதலில், இலங்கை விமானப்படையின் 10 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் 6 விமானங்கள் சேதமடைந்ததாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், இலங்கை அரசாங்கத்துக்கு நான்காயிரம் மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலில் கரும்புலிகள் அணியைச் சேர்ந்த 21 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் பங்கெடுத்தவர்கள் என்று, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் விடுதலைப் புலிகள் கைதுசெய்யப்பட்டு, அனுராதபுர மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விமானப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்று இவர்களுக்கு எதிராக தலா 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

புருசோத்தமன் அரவிந்தன், ராசவல்லவன் தபோரூபன் ஆகிய இரண்டு முன்னாள் புலிப் போராளிகளும், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுகளை அரவிந்தன் ஏற்றுக் கொண்டிருந்தார். தபோரூபன், தன் மீதான முதலாவது மூன்றாவது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இதனடிப்படையில், இரண்டு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அனுராதபுர மேல்நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் நேற்று தீர்ப்பளித்தார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஒரே நேரத்தில் அனுபவிக்கக் கூடியதாக, இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ஏற்கனவே 8 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர்கள் இருவரையும் விடுதலை செய்யவும் நீதிபதி பணித்துள்ளார்.