மீண்டும் வடக்கின்

கிளிநொச்சி - பளையில் புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளி கைது - ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக குற்றச்சாட்டு

தொடரும் கைது நடவடிக்கையால் அச்சத்தில் மக்கள்
பதிப்பு: 2019 ஜன. 21 11:52
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 12:02
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Palai
#LTTE
#Srilanka
#Bomb
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போருடன் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டதாகவும் ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் தெரிவித்த இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான முன்னாள் விடுலைப் புலி போராளிகளைக் கொன்று குவித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணாமல் ஆக்கியுள்ள நிலையில், தற்போதும் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் போராளி ஒருவரைக் கைதுசெய்துள்ளது.
 
முன்னாள் போராளி என்ற காரணத்தினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் சித்திரவதை முகாம் என்று அழைக்கப்படுகின்ற தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, கிளிநொச்சி - பளை - கரந்தாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதான சுதன் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பளைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததாகவும், அதனடிப்படையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த நபரது வீட்டை சோதனையிட்ட போது, 02 கைத்துப்பாக்கிகள், ஒரு கட்டுத்துவக்கு மற்றும் 150 துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டதாகவும், இதனடிப்படையிலேயே அதனுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்த, இன அழிப்பு போரின் போது தனது காலொன்றை இழந்துள்ள, குறித்த நபர் நபரைக் கைதுசெய்துள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்ததாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.

சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குறித்த நபரைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன அழிப்பு போரின் முன்னரும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் உறவினர்கள் கடந்த 2 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தொடர்ந்தும் சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வாறான கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றமை மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.