இலங்கை ஒற்றையாட்சி அரசின் மற்றுமொரு திட்டம்

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு

விசாரணைகள் நிறுத்தப்படும் என ஊடக அமைப்புகள் சந்தேகம்
பதிப்பு: 2019 பெப். 14 22:53
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 15 09:03
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Media,
#assassination,
#reimbursement
ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட, கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது. ஆனால் நஷ்டஈட்டை விட நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என தமிழ் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நஷ்டஈடும் உரிய முறையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு ஒன்று நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தது.
 
அங்கு யாழ் ஊடக அமையத்தின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருந்தனர்.

2005 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் கொல்லப்பட்ட. காணாமல் ஆக்கப்பட்ட, அச்சுறுத்தல்களினால் ஊடகத் தொழிலை இழந்தவர்களுக்கான நஷ்டஈட்டுத் திட்டம் ஒன்றை மைத்திரி - ரணில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் இதுவரை வடக்கு - கிழக்கு மாகாணத்தில் எவருமே விண்ணப்பிக்கவில்லை என அந்த அதிகாரிகள் குழு கூறியிருந்தது. அதற்குப் பதிலளித்தபோதே யாழ் ஊடக அமையத்தின் பிரதிநிதிகளும் பத்திரிகை ஆசிரியர்களும் இவ்வாறு கூறியுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என்பதைக் கண்டித்து கொழும்பில் உள்ள ஊடக அமைப்புகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் ஒன்றை சமீபத்தில் கையளித்திருந்தன.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்குச் சென்று நஷ்டஈட்டை வழங்குவது குறித்து உரையாடியுள்ளது.

சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அரசாங்கம் வழங்கவுள்ள நஷ்டஈட்டினால் விசாரணைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் நஷ்டஈடு என்பது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்ளின் குடும்பங்களுக்கு ஓர் இடைக்கால நிவாரணம் மாத்திரமே என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

நஷ்டஈட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் சென்று உறவினர்கள் பெற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் வேண்டுமானால் விண்ணப்பப் படிவங்களை ஊடக அமைப்புகளின் மூலமாக விநியோகித்து பூர்த்தி செய்து அதனை யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் என்றும் அதற்கும் அரசாங்கம் உடன்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் ஆகியோர் கொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்றவை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் எடுத்துக் கூறினர்.

ஆகவே இலங்கை இராணுவத்தினராலும் இலங்கைப் பொலிஸாராலும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலைகள் என்று தெரிந்தும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்குரிய நஷ்டஈட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை எவ்வாறு பொலிஸ் நிலையங்களில் வந்து பெறமுடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

நஷ்டஈட்டைப் பெறுவதற்கான இலங்கைப் பொலிஸாரின் முறைப்பாட்டு அறிக்கையை உறவினர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டினர்.

இவற்றில் உள்ள நியாங்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், நஷ்டஈடு வழங்கப்படுவதால் விசாரணைகள் முடக்கப்படாது என்றும் இது இடைக்கால நிவாரணம் மாத்திரமே எனவும் உறுதியளித்தனர்.

அத்துடன். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நஷ்டஈட்டைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை இலங்கைப் பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஊடக அமைப்புகள் மூலமாக விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து மாவட்ட செயலகங்களில் கையளிக்க முடியும் எனவும் உறுதியளித்தனர்.

வடமாகாணத்தில் உள்ள பாதிக்கப்பட்ட ஊடகத்துறையினரின் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள குழு ஒன்று பெற்றுக்கொள்ளவது என இணக்கம் ஏற்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் பற்றிய விபரங்களை அறிந்து விண்ணப்பப் படிவங்களை கையளிக்கும் ஏற்பாடுகள், அங்குள்ள ஊடக அமைப்புகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்த சந்திப்பில் வடமாகாண பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் குணரட்ன, உதயன் பத்திரிகை ஆசிரியர் பிறேமானந், காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன், யாழ் ஊடக அமையத்தின் ஸ்தாபகர் ரட்ணம் தயாபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.