இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையில்

ஐக்கிய தேசியக் கட்சியா, ஐக்கிய தேசிய முன்னணியா? இளம் உறுப்பினர்களிடையே குழப்பம் - இரகசியச் சந்திப்பு

அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்ட முன்னணியாகச் செயற்படும் என்கிறார் சஜித்
பதிப்பு: 2019 பெப். 16 14:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 16 20:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Political
#UNP
#RanilWickramasinghe
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணிக்குள் இருந்தே வேட்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அதனை ஏற்றுள்ளனர். ஆனால் கட்சியின் இளைய உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
 
அத்துடன் பங்காளிக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் தலையிடக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இரகசிய சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவாகப் பிரிந்து கலந்துரையாடுவதன் நோக்கம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 பேரும் குழுவாகப் பிரிந்து செயற்படுவதன் பின்னணியில் யார் செயற்படுகின்றனர் என்பது குறித்து அறியுமாறும் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருக்கு பணித்துள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் குறித்த 17 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் குறித்து உரையாடியதாக கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளனர்.

குறிப்பாக தேசிய அரசாங்கம் தேவை இல்லையென்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் பங்காளிக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் தலையிடக் கூடாது எனவும் 17 உறுப்பினர்களும் முடிவு எடுத்ததாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பல கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு தற்போது ஐக்கிய தேசிய முன்னணியாகச் செயற்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணியாகவே ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும் எனவும் கட்சியின் பிரதித்த தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்பம் ஜனநாயகத் தேசிய முன்னணிக்கு சவால் அல்ல எனவும் அந்தக் குடும்பத்தில் இருந்து கோட்டாபயவோ, பஸிலோ எவர் போட்டியிட்டாலும் ஜனநாயகத் தேசிய முன்னணி தோற்கடிக்கும் என்றும் சஜித் பிரேமதாச கொழும்பில் இன்று சனிக்கிழமை கூறியுள்ளார்.