இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டம் - அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தைப் பெற முயற்சி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை
பதிப்பு: 2019 பெப். 18 11:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 18 14:03
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Political
#PresidentialElection
#ProvincialCouncilElection
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என ஏலவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டிய தேவையுள்ளது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படலாமென பிரதான அரசியல் கட்சிகளின் தகவல்கள் கூறியிருந்தன. எனினும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முற்படுவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய நாடாளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்கின்றது.
 
ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகளும் ஆறு மாதமும் பூர்த்தியடையாமல் தேர்தலை நடத்த முடியாது.

எனினும் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விருப்பம் கொண்டுள்ளதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ஏலவே இவ்வாறான யோசனை ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இனக்கம் வெளியிட்டிருந்தார். ஆனாலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவும் மற்றும் ஜே.வி.பி போன்ற எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியதால் நாடாளுமன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது,

இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்த ரணில் விக்கிரமசிங்க யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். ஆனால் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவாரா என்பது குறித்து தகவல்கள் இதுவரை இல்லை.

ஆனாலும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தன்னை வேட்பாளராக நியமிக்க இதுவரை இணக்கம் ஏற்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது என்ற ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு மைத்திரி இணங்கக் கூடும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் இணக்கம் தெரிவிக்கலாம் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடத்துவது என சகல கட்சிகளும் இணக்கம் வெளியிட்டால் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டின் இறுதியிலேயே நடத்தப்படலாம் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.