இருவேறு நிலைப்பாட்டுடன்

இலங்கை அரச பிரதிநிதிகள் ஜெனீவா பயணம்- இரண்டு வருட கால அவகாசத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

ரணில் சாா்பிலும் அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் ஜெனீவா செல்வர்
பதிப்பு: 2019 மார்ச் 06 23:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 07 00:14
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்க அமைச்சர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட ஏற்பாட்டில் இவர்கள் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த மூன்றுபோரும் ஜெனீவா பயணம் செல்லவுள்ளமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடவில்லை என்றும் இதனால் இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
ஜெனீவா மனித உரிமைச் சபையில் பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி மேலும் இரண்டு வருட கால அவகாசத்தையும் கோரவுள்ளது.

ஆனால், ஜெனீவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் இரண்டு வருடகால அவகாசம் தேவையில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வருகின்றார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டையே ஜெனீவா செல்லவுள்ள அமைச்சர்கள் இருவரும் ஆளுநர் சுரேன் ராகவனும் விளக்கமளிக்கவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இருவேறு கருத்துக்களுடன் ஜெனீவா செல்வதா என்பது குறித்து மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே வாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் விரைவில் ஜெனீவா சென்று மேலும் இரண்டு வருடகால அவகாசத்தைக் கோரவுள்ளனர்.

போர்க்குற்ற விசாரணை, பொறுக்கூறல் உள்ளிட்ட பல விடயங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மேலும் இரண்டு வருடகால அவகாசம் ஜெனீவா மனித உரிமைச் சபையினால் வழங்கப்படவுள்ளது.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டுடன் ஜெனீவா செல்லவுள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்படவுள்ளதை கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.