கண்டி பேரணி பிசுபிசுத்தது

மைத்திரி-மகிந்த மோதல் - பேரணியில் அதிகளவு மக்கள் பங்குபற்றவில்லை; ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இழுபறி

இணக்கம் ஏற்படும் வரை மகிந்த அணியுடன் இணைந்து செயற்பட மைத்திரி தடை
பதிப்பு: 2019 மார்ச் 09 14:36
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 09 22:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#MahindaRajapaksha
#MaithripalaSrisena
#Srilanka
#Political
#Election
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை எட்டாம் திகதி கண்டியில் இடம்பெற்ற பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளாமை குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.

இந்தப் பேரணியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நடத்துமென ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுப்புத் தெரிவித்திருந்ததாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய ராஜபக்ச இந்தப் பேரணியில் கலந்துகொள்வார் என்றும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக கோட்டபாய ராஜபக்சவை மகிந்த ராஜபக்ச மறைமுகமாக அறிவிப்பார் எனவும் ஏலவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விசனமடைந்ததாகவும் இதன் காரணத்தினால் பேரணியில் கலந்துகொள்ளவில்லை எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் மகிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இதுவரை இணக்கம் ஏற்படவில்லை. இதனால் இணக்கம் ஏற்படும் வரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடத்தும் பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்குகொள்ளக் கூடாது என மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என்று கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமிக்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன கூறி வருகின்றார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கண்டியில் நேற்று இடம்பெற்ற மகிந்த ராஜபக்ச தரப்பின் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.