தமிழர் தாயகத்தின்

மன்னாரில் காணாமல் போனோருக்கான அலுவலகம் - பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என சந்தேகம்?

காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கு கடும் எதிர்ப்பு
பதிப்பு: 2019 மார்ச் 11 06:49
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 11 06:54
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#OfficeofMissingPerson
#OMP
#Mannar
#MissingPersons
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு காலந்தாழ்த்தாது விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் OMP எனப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழர் தாயகப்பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் திறக்கப்படவுள்ளது.
 
இந்த தகவலை காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தெற்கில் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 2ஆம் திகதி இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு, தெற்கு உட்பட நாட்டில் 8 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள காணாமல் போனோர் பணியகம், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த வருடத்துக்குள் பூர்த்தியாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே காணாமல்போனோர் பணியகம் அமைக்கப்பட்டது.

இந்தப் பணியகத்துக்கான தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களைக் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

கடந்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விபரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் இந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறிருப்பினும் OMP எனப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் இந்த அலுவலகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமக்கு எவ்வித நீதியும் பெற்றுத்தரப்படப் போவதில்லை என்பதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உறுதியாக இருக்கின்றனர். அண்மையில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கண்டனப் போராட்டத்தின் போது கூட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து பாரிய களேபரம் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் மன்னாரில் அமையவுள்ள காணாமல் போனோர் தொடர்பான இந்த அலுவலகத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.