மன்னாரின் முன்னோடி ஊடகவியலாளர் காதரின் இறுதிப் பேட்டியின் ஒலிவடிவம்

மரணப்படுக்கையிலும் தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்திய மக்கள் காதர்

ஊடகவியலாளர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்
பதிப்பு: 2018 ஜூன் 10 19:25
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 22 14:46
மக்கள் காதரின் இறுதிச் சடங்கு
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குமான உறவுக்கும் நல்லிணக்கத்திற்கும் தனது இறுதிக்கணம் வரை குரல் கொடுத்துவந்த மன்னாரைச் சேர்ந்த முன்னணி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ‘மக்கள் காதர்’ என்று அறியப்பட்ட முகைதீன் அப்துல் காதர் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 74 வது வயதில் இயற்கை எய்தினார். முற்போக்குச் சிந்தனையாளரான இவர் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் தற்புகழ்ச்சியின்றிச் செயலாற்றி வந்தார்.
 
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போருக்கு நீதிகேட்கும் பணியில் உறுதியாக நின்று செயலாற்றிய முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு உறுதுணையாக நின்ற மன்னார் வாழ் இஸ்லாமியப் பெருமக்களில் ஒருவர் மக்கள் காதர்.

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் தமிழ் முஸ்லிம் உறவுக்காகக் குரல் கொடுத்த அவர் மரணப்படுக்கையில் இருந்தவாறு கூர்மை செய்தித்தளத்திற்குத் தந்த பேட்டி இங்கு அவரின் நினைவாகப் பிரசுரமாகிறது.

மக்கள் காதர்
முகைதீன் அப்துல் காதர் (13.10.1943 - 10.06.2018)
பௌத்தர்களும் இந்துக்களும் மாத்திரமே இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்று தனது நண்பரான மறவன்புலவு க சச்சிதானந்தன் ஏன் ஒரு புதிய பூகம்பத்தை ஊடகங்களூடாக ஏற்படுத்தி வருகிறார் என்ற கேள்வியை மிகவும் நிதானத்தோடு மக்கள் காதர் மரணப் படுக்கையில் இருந்தவாறு கூர்மை செய்தித்தளத்திடம் எழுப்பியிருந்தார்.

அவரது இந்தக் கேள்வி மிகவும் நியாயமானது. அனைவரதும் சிந்தனைக்குரியது.

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே இலங்கைத்தீவில் தமிழ் மொழி மூதாதையர்கள் இருந்திருக்க வேண்டும். பௌத்தம் புத்தபெருமானின் காலத்திலேயே, ஏறத்தாழ் 3500 வருடங்களுக்கு முன், இங்கு வந்துவிட்டதாக எடுத்துக்கொண்டாற்கூட இலங்கையின் பூர்வீக குடிகாளாக அக்காலத்தில் இருந்தோர் தமிழ் பேசுவோரின் மூத்த குடிகளே. இஸ்லாமியர் பிற்காலத்தவராயினும் அவர்கள் தமிழ் பேசும் மூத்தகுடிகளின் வழித் தோன்றல்களே என்று மக்கள் காதர் தனது இறுதிக் கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

இவர் கலைவாதி கலீல் என்று பிரபலமாக அறியப்பட்ட மூத்த எழுத்தாளரின் இரட்டைச் சகோதரர் ஆவார். இவரது அனைத்து சகோதரர்களுமே கலை இலக்கிய ஆர்வலர்களும் படைப்பாளிகளுமாவர்.

மன்னாரின் ஊடகப் பாரம்பரியத்தில் முத்திரை பதித்த முன்னோடிகளில் ஒருவாரான இவர் பின்னாளில் காலச்சுவடுகள் எனும் இதழையும் நடாத்தியிருந்தார்.

"ஊழல் குதங்களினதும் சமுதாயப் புல்லுருவிகளினதும் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய பத்திரிகையே மக்கள் பத்திரிகை," என்று அன்னாரின் இணைச் சகோதரரான கலைவாதி கலீல் அவர்கள் தனது நூல் ஒன்றின் முகவுரையில் குறிப்பிட்டிருந்தார்.

1960களில் "மக்கள்" பத்திரிகையை ஆரம்பித்து, சவால்களுக்கு மத்தியில் எதிர்நீச்சலடித்து வெற்றிகரமாக நடாத்தியவர் என்ற வகையிலேயே அப்துல் காதர் நாளடைவில் மக்கள் காதர் என்று அழைக்கப்படலானார்.

மன்னாரின் தற்போதைய கத்தோலிக்க ஆண்டகை உட்பட பலரும் இறுதிப்பிரியாவிடையில் கலந்துகொண்டிருந்தனர்.

மக்கள் காதர்
நோய்வாய்ப்பட்டிருந்த தன் இறுதிக் காலத்திலும் முற்போக்கான கருத்துக்களை வெளிப்படுத்துவதில் மக்கள் காதர் பின் நிற்கவில்லை
பெருமளவிலான மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றலோடு மன்னார் மூர் வீதியை அண்டிய முஸ்லிம் மையவாடியில் இவரது ஜனாசா ஞாயிறு மாலை அடக்கம் செய்யப்பட்டது.

ஐந்து ஆண் சகோதரர்களுடனும் ஐந்து பெண்சகோதரிகளுடனும் மீரா உம்மா ஆகிய தாயாருக்கும் மதார் முகைதீன் ஆகிய தந்தையாருக்கும் பிறந்தவர் காதர். மூத்த ஆண் சகோதரர்கள் மூவரும் மூத்த பெண் சகோதரிகள் இருவரும் ஏலவே அமரத்துவம் அடைந்துவிட்டனர்.

மூத்தவரான எம் ஏ ரஹ்மான் இலங்கையில் வித்வான் பட்டம் பெற்ற ஆரம்பக் கலைஞர்களில் ஒருவர். இன்னொரு சகோதரரான எம் ஏ கபூர் என்பவர் சிங்களத் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக விளங்கியவர்.

அன்னாரது மனைவியார் சிலவருடங்களக்கு முன்பே அமரத்துவம் அடைந்துவிட்டார்.

மக்கள் காதர் தனது பிள்ளைகளான மூன்று மகள்மாரையும் இரண்டு மகன்மாரையும் விட்டுச் செல்கிறார்.