பொறுப்புக் கூறல், போர்க்குற்ற விசாரணை குறித்த

பிரேரணை இலங்கையின் திருத்தங்களுடன் நிறைவேறும் - உயர்மட்டக்குழு ஜெனீவா பயணம், சம்பந்தன் ஆதரவு

ஒரேகுழுவாகச் செல்வதற்கு மைத்திரி - ரணில் இணங்கினர் - உள்ளக விசாரணையை இலங்கை கோரவுள்ளது
பதிப்பு: 2019 மார்ச் 18 10:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 18 15:10
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Warcrime
#Genevasession
#Maithripalasrisena
#Ranilwickramasinghe
#TNA
#Tamilgenocide
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் உயர்மட்டக்குழு இன்று திங்கட்கிழமை பயணமாகியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ளனர். மனித உரிமைச் சபையில் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உயர்மட்டக்குழு திருத்தங்கள் உள்ளடங்கிய கருத்துக்களை முன்வைக்கவுள்ளது.
 
பொறுப்புக்கூறல், போர்க்குற்ற விசாரணை தொடர்பாக மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்படுவதை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏலவே நிராகரித்திருந்தார்.

குறிப்பாக மனித உரிமைச் சபை 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி வெளியிட்ட 30/60 தீர்மானத்தில் உள்ள விதப்புரைகளை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவ்வாறு தெரிவித்திருந்தார். ஜே.வி.பியும் அந்த விதப்புரைகளை நிராகரித்திருந்தது. இந்த நிலையில் சமர்ப்பிக்கப்படவுள்ள குறித்த பிரேரணையில், 30/60 தீர்மானத்தில் உள்ள விதப்புரைகளும் உள்ளடங்கியுள்ளன.

அவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இணக்கம் தொிவித்துள்ளது.

ஆனால் இந்த இணக்கத்தின்போது 30/60 தீர்மானத்தில் உள்ள விதப்புரைகளில் சில திருத்தங்களை ஜெனீவா சென்றுள்ள இலங்கை உயர்மட்டக்குழு முன்வைக்குமென மைத்திரிபால சிறிசேனவுக்கு ரணில் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

உயர்மட்டக்குழுவில் சென்றுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மைத்திரிபால சிறிசேனவின் நேரடிப் பிரதிநிதியாகச் சென்றுள்ளதால் பிரேரணையில் திருத்தங்கள் செய்வதற்கு ரணில் அரசாங்கம் இணங்கியுள்ளது.

திருத்தங்களைச் செய்வது தொடர்பாக மைத்திரி - ரணில் இணங்கியுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

ஏலவே மைத்திரி, ரணில் சார்பில் வெவ்வேறுபட்ட இரு உயர்மட்ட அதிகாரிகள் குழு இலங்கையின் சார்பில் ஜெனீவாவுக்குச் செல்லவிருந்த நிலையில், பின்னர் நிலமையை உணர்ந்து மைத்திரி - ரணில் இருவரும் இணங்கியதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இலங்கை உயர்மட்டக்குழு பிரேரணையில் முன்வைக்கும் திருத்தங்களை ஜெனீவா மனித உரிமைச் சபை ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது குறித்து எதுவுமே கூறமுடியாது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதால் மனித உாிமைச் சபை, இலங்கை உயர்மட்டக்குழுவின் திருத்தங்களுக்கு இடமளிக்கலாம் என கூறப்படுகின்றது.

இதனால் திருத்தங்களுடன் பிரேரணை தீா்மானமாக நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக ஜெனீவாவில் உள்ள இலங்கை உயா் அதிகாாியொருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன்போது சில திருத்தங்களை இலங்கை உயர்மட்டக்குழு முன்வைக்கவுள்ளது.

அதேவேளை, மனித உரிமைச் சபை 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி வெளியிட்ட 30/60 தீர்மானத்தில் உள்ள விதப்புரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் கோாியுள்ளன.

ஆனால் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசம் வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஜெனீவா பிரேரணைக்கும் இணை அனுசரணை வழங்கவுள்ளது.

இதேவேளை இலங்கை நீதிக்கட்டமைப்பின் பிரகாரம் போர்க்குற்ற விசாரணையை இலங்கையில் நடத்த வேண்டும் என்றும் ஏலவே சில படை உயர் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் உயர்மட்டக்குழு மனித உரிமைச் சபையில் கூறவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

உள்ளக விசாரணைக்கே இலங்கை அரசாங்கம் வலியுறுத்தவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.