இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

கோட்டாபய போட்டியிட்டால் மகிந்த அணி தோற்பது உறுதி ரணில் - ராஜபக்ச குடும்பமும் ஒதுங்கும் என்கிறார்

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்று உரிய நேரத்தில் அறிவிக்கப்படுமாம்
பதிப்பு: 2019 மார்ச் 18 22:55
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 20 09:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Presidentialelection
#President
#Gotabajarajapaksha
#Ranilwickramasinghe
#UNP
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்படுவார் என செய்திகள் வெளியானதும் கொழும்பில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளை, அவசர அவசரமாக கென்யாவில் இருந்து கொழும்புக்குத் திரும்பிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென அறிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை உனடியாக அழைத்து உரையாடியுமுள்ளார்.
 
மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரன கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேர்ந்தே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முடிவு எடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மைத்திரிபால சிறிசேன கென்யா நாட்டில் நின்றபோது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கசியவிடப்பட்டிருந்தன.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணி தோல்வியடைவது உறுதியென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் கட்சியின் உயர்பீடம் தீர்மானிக்கும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டால் மக்கள் அதனை நிராகாிக்க வேண்டுமென இடதுசாரி முன்னணி கூறியுள்ளது.

ஜே.வி.பி கருத்துக் கூறவில்லை. ஆனால் அவதானிப்பதாக மாத்திரமே ஜே.வி.பி தெரிவித்துள்ளது.