வடமாகாணத்தின்

மன்னாரில் அரங்கேறும் அடாவடி - பொதுமகனது காணியில் கழிவுகளை எரியூட்டும் இலங்கை இராணுவம்

விரைவாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வலியுறுத்தல்
பதிப்பு: 2019 மார்ச் 21 15:19
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 21 15:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Military
#Mannar
#Land
தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் மன்னார் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம் - நாவற்குளம் பகுதியில், இராணுவத்திடமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் இலங்கை இராணுவம், கழிவுப்பொருட்களைக் கொட்டுவதுடன் அங்கு அவை தீயிட்டு எரிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
 
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் நாவற்குளத்திற்குச் செல்லும் பிரதான சந்தியில் உள்ள தனியாரின் காணியில் கடந்த பல வருடங்களாக முகாமிட்டு தங்கியிருந்த இலங்கை இராணுவத்தினர் பின்னர் அண்மையில் அங்கிருந்து வெளியற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த காணியில் அப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் மற்றும் இராணுவ காவலரண்களில் உள்ள இராணுவத்தினரது கழிவுப் பொருட்கள் எடுத்துவரப்பட்டு எரியூட்டப்படுவதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

குறிப்பாக இராணுவத்தினர் பயன்படுத்திய உடைகள், தலைக்கவசங்கள், குறிப்பேடுகள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இதன்போது எடுத்துவரப்பட்டு எரிக்கப்படுவதாகவும் இதனால் அயலில் உள்ள தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

இந்த நடவடிக்கையை இராணுவம் தொடர்ந்து மேற்கொள்ள இடமளிக்காது விரைவாக நடவடிக்கை எடுப்பதுடன் மக்கள் குடியிருப்பை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போன்ற இராணுவத்தினரின் செயற்பாடு கடந்த காலங்களில் கிளிநொச்சியிலும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது இராணுவத்தினரின் கழிவுப் பொருட்கள் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் கொட்டப்பட்டதுடன் அக் கழிவுகளை உண்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன் பிரதேச மக்கள் நோய்வாய்ப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.