கொழும்பில் பதினொரு தமிழர் கடத்தப்பட்டுக் கொலை

அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, பிரதான சந்தேக நபரைப் பாதுகாத்தார்- நீதிமன்றத்தில் நிசாந்த டி சில்வா

மனைவி, ஆசைநாயகி ஆகியோரின் வாக்குமூலங்களில் உண்மை வெளியானது
பதிப்பு: 2019 ஏப். 03 23:06
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 03 23:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அறிந்திருந்தாக இலங்கைக் குற்றப்புலனாய்வு பிரிவின் சமூக விடயங்கள் தொடர்பான விசாரணைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கொழும்புக் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார். கொழும்பு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாரச்சியை இலங்கைக் கடற்படை தலைமையகத்தில் மறைந்திருக்க அவர் உதவியளித்தமைக்கு ஆதரமாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
குறிப்பாக பிரசாத் ஹெட்டியாரச்சியின் மனைவி மற்றும் ஆசை நாயகி ஆகியோரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தொலைபேசி பகுப்பாய்வு உள்ளிட்ட சில பரிசோதனைகளை ஆதரமாகக் கொண்டு உதவியளித்த விவகாரம் அம்பலமாகியுள்ளதாகவும் நிசாந்த டி சில்வா இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி மறைந்திருக்க உதவியமைக்காக அட்மிரல் ரவீந்திர உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதிவான் முனனிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

ஒரு மாத காலத்தில் ஹெட்டி ஆராச்சி பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை ஆதாரமாக் கொண்டு இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முதலில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது குறித்த அந்தத் தொலைபேசி இலக்கத்தில் இருந்து அவர் அதிகமாக உரையாடிய பெண் ஒருவர் தொடர்பாகத் தகவல் கிடைத்தது.

சிரியானி ஜெயசிங்க என்ற பெண் ஒருவருடன், ஹெட்டி ஆராச்சி ஒரு மாதத்தில் பல தடவைகள் உரையாடியுள்ளார். அந்தத் தொலைபேசி இலக்கம் யாருடையது என்பதை அறிந்து பின்னர் குறித்த அந்தப் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, ஹெட்டி ஆராச்சியை இலங்கைக் கடற்படையின் தலைமையகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் இதனால் குறித்த ஆசை நாயகி கடற்படை தலைமையகத்துக்குச் சென்று ஹெட்டி ஆராச்சியை சந்த்தித்தாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக நிசாந்த டி சில்வா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இலங்கைக் கடற்படைத் தலைமையகத்தில் இருவரும் சந்தித்த இடத்தைச் சென்று பார்வையிட்டுப் படம் எடுத்ததாகவும் தனது சாட்சியத்தில் நிசாந்த டி சில்வா கூறியுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் ஹெட்டி ஆராச்சி இலங்கைக் கடற்படைத் தலைமையகத்திலேயே தங்கியிருந்தார் என்று அவரின் மனைவியும் வாக்கு மூலமளித்துள்ளார்.

ஹெட்டி ஆராச்சியின் இவ்வாறான செயற்பாடுகளுக்கெல்லாம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன உதவியளித்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவம் நிசாந்த டி சில்வா கோட்டை நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இவற்றைச் செவிமடுத்த கொழும்புக் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க, இந்த விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, ஏலவே சந்தேக நபராக இருந்தபோதே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை முப்படைகளின் பிரதானியாகப் பதவி உயர்த்தினார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை கைது செய்ய அனுமதிக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஒக்ரோபா் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கூறியிருந்தார்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளில் நம்பிக்கையில்லையென உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணையை நடத்துவதாக உறவினர்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.