நடப்பு நிதியாண்டுக்கான

வரவுசெலவுத் திட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறும்- ஆனாலும் சுமந்திரன் குறைகூறுகின்றார்

வெளிப்படைத்தன்மை இல்லையென்று இலங்கை அரச நிதிக்குழு சார்பில் விமர்சனம்
பதிப்பு: 2019 ஏப். 04 15:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 04 16:11
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறுமென கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கொழும்பில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காதெனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார். அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறியுள்ளார்.
 
ஆனால் அரசாங்க நிதிக்குழுவின் சார்பிலேயே சுமந்திரன் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். இலங்கை நிதியமைச்சின் மீதும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை ஐந்தம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிதிக்குழு சார்பில் வரவு செலவுத் திட்டத்தின் குறைபாடுகள் குறித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்ளிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கூட்டமைப்பில் அங்கம் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் முரண்பட்டாலும் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுள்ளார்.

அரசியல் காரணங்களின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் சம்பந்தன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, கூட்டமைப்பில் இருந்து விலகிச் செயற்படும் ஈபிஆர்எல்எப் இயக்கத்தைச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தன், ரணில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க முடியாதென கூறியுள்ளார்.

இதேவேளை, ஆதரவாக வாக்களிக்காது விட்டாலும் எதிராக வாக்களிப்பதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான சில உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்ச தரப்புடன் சேர்ந்து வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக கடந்த வாரம் பல சுற்றுப் பேச்சுக்களும் இடம்பெற்றன.

ஆனாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு ஆதரவாகவுள்ள உறுப்பினர்கள் பலர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் சபையில் நடுநிலை வகிப்பதாகத் தீர்மானித்துள்ளனர்.

அவ்வாறு தீர்மானம் எடுத்த உறுப்பினர்களோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாடியிருந்தார். ஆனால் அந்த உறுப்பினர்கள் கருத்தை மாற்றவில்லை. மகிந்த ராஜபக்ச தரப்புடன் இணைந்து செயற்பட முடியாதென உறுதியாகக் கூறியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.