கொழும்பில்

மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் கொலை-கடற்படைத் தளபதியிடம் தொடர் விசாரணை

மேலும் பல இலங்கைப் படையதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு- நமபிக்கையில்லையென உறவினர்கள் தெரிவிப்பு
பதிப்பு: 2019 ஏப். 04 23:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 05 00:05
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பில் கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பிரதேசங்கில் 2008 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்களைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் இன்று வியாழக்கிழமை நான்காவது தடவையாகவும் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் எட்டு மணித்தியாளங்கள் விசாரணை இடம்பெற்றதாக இலங்கையின் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் 26 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
ஏலவே நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்றும் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்றது எனவும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை இரகசியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம்19 ஆம் திகதி மூன்றாவது தடவையாக நான்கு மணித்தியாளங்களும் கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமையன்று எட்டு மணி நேரமும் கடந்த 13 ஆம் திகதி ஆறு மணிநேரமும் கரன்னகொடவிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சிலரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இலங்கைக் கடற்படையின் முன்னாள் புலனாய்வு தலைமை அதிகாரியும், தற்போது ரியர் அட்மிரல் அதிகாரியுமான ஆனந்த குருகே, கரன்னாகொடவின் ஆலோசகராக பதவி விகித்த கொமாண்டர் உதயகீர்த்தி பண்டார, முன்னாள் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் துஷித் வீரசேகர ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த சம்பவம் குறித்து இலங்கை முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அறிந்திருந்தாக இலங்கைக் குற்றப்புலனாய்வு பிரிவின் சமூக விடயங்கள் தொடர்பான விசாரணைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கொழும்புக் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு நேற்றுப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

கொழும்பு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாரச்சியை இலங்கைக் கடற்படை தலைமையகத்தில் மறைந்திருக்க அவர் உதவியளித்தமைக்கு ஆதரமாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பிரதேசங்கில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்களைக் கடத்திச் செல்லப்பட்டு இலங்கைக் கடற்படையின் தலைமையகத்தில் சட்டத்திற்கு முரணாகத் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் இந்த விசாரணைகளில் நம்பிக்கை இல்லையென்று உறவினர்கள் கூறுகின்றனர்.