வடமாகாணம்

தலைமன்னார் கடலில் கைதான நைஜீரியப் பிரஜைகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் கைது
பதிப்பு: 2019 ஏப். 05 11:15
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 05 11:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தலைமன்னார் கடற்பரப்பில் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினரால் கைதான நான்கு நைஜீரியப் பிரஜைகளையும் பேசாலை மீனவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அப்பகுதியால் சென்ற இயந்திரப் படகொன்றினை வழிமறித்து சோதனையிட்டபோது அப்படகில் ஆறுபேர் சட்ட விரோதமாகப் பயணித்ததை அவதானித்துள்ளனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசாரணைகளில், படகில் பயணித்த ஆறுபேரில் நால்வர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவர் மன்னார் பேசாலை உதயபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
 
இந்நிலையில் விசாரணையின் பின் முதலாம் திகதி திங்கட்கிழமை குறித்த ஆறுபேரையும் தலைமன்னார் பொலிஸாரிடம் இலங்கைக் கடற்படையினர் கையளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைதான பேசாலை உதயபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரும் குறித்த நான்கு நைஜீரிய நாட்டவர்களையும் படகு மூலமாக சட்ட விரோதமாக இந்தியாவிற்கு அழைத்து சென்ற வேளையிலேயே இலங்கை கடற்படையினரால் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான நைஜீரிய பிரஜைகள் நால்வர் தொடர்பான தகவல்களை தலைமன்னார் பொலிஸார் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மீரிகான தடுப்பு முகாமிற்கும், இலங்கைப் பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கும் அறிவித்துள்ளனர்.

இதேவேளை தலைமன்னார் பொலிஸாரால் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மாவட்ட நீதிமன்றின் உத்தரவின் பிரகாரம் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.