படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பறிக்கை!

இந்திய ஒன்றிய அளவில் பாஜகவிற்கு எதிர்ப்பு அலை உருவாகிறதா?

இதுவரை எக்கட்சிக்கும் உருவாகாத எதிர்ப்பு ஏன்?
பதிப்பு: 2019 ஏப். 06 02:26
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஏப். 08 21:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் வேளையில், இந்திய ஒன்றிய அளவில் கலைஞர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்தோரின் பாஜக அரசாங்கத்திற்கு எதிரான கூட்டறிக்கைகள் வெளியாகி வருகிறது. 150ற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 100ற்கும் மேற்பட்ட இந்திய திரைப்பட இயக்குநர்கள், 200ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், 700ற்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் என இதுவரை பலத்தரப்பினரும் "ஜனநாயகம் காப்போம், பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள்" என இந்திய ஒன்றிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். எதிர்ப்புகளை சமாளிக்க, அதிலிருந்து மீள 'பாகிஸ்தான் தாக்குதல்', 'தீவிரவாதிகள்', 'இந்திய ஒற்றுமை', 'அறிவியல் சாதனைகள்' என தொடர்ந்தும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் பாஜகவினர்.
 
தமிழ் திரை உலகின் வெற்றி இயக்குநர்களான வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் குர்விந்தர் சிங்க், புஷ்பேந்திர சிங்க், தீபா தன்ராஜ், அஞ்சலி மொண்டைரோ, தீபிகா குமாரவேல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய ஒன்றிய அளவிலான இயக்குநர்கள் கடந்த வாரம் வெளியிட்ட கூட்டறிக்கையில்,

"இந்திய ஒன்றிய அளவில், இந்திய அரசியல் சாசனத்தை மதித்து, ஜனநாயகத்தை காத்து, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை காக்கும் கட்சிகளை ஆதரியுங்கள். ஆட்சி அதிகாரம் செலுத்தி வரும் பாஜக அரசாங்கத்தைத் தோற்கடியுங்கள்" எனவும் கூறியுள்ளனர்.

மேலும் அவ்வறிக்கையில், "இந்தியாவின் மதச்சார்பற்றத் தன்மைக்கு நடந்துவரும் பாஜக அரசாங்கத்தால் ஆபத்து நிலவுவதாகவும், பண்பாட்டு மற்றும் பூகோள ஒற்றுமைக்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது. அடுத்த முறை ஆட்சியில் பாஜக தொடர்ந்தால், அனைவரும் நசுக்கப்படுவோம், நம்மிடம் இருந்து அனைத்தும் பறிக்கப்படும்" எனவும் எடுத்துரைக்கின்றனர்.

இவ்வறிக்கையை https://www.artistuniteindia.com/ என்னும் இணையத்தில் தமிழ், இந்தி, மராத்தி, வங்காளி உள்ளிட்ட 13 இந்திய ஒன்றிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட அருந்ததி ராய், மீனா கந்தசாமி உள்ளிட்ட 200 இந்திய எழுத்தாளர்கள், "வெறுப்பு அரசியலுக்கு முடிவுக்கட்ட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாத்து சமத்துவத்தைப் பேணுவது நம் கடமை" எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்களின் அறிக்கையில், "உணவு, இருப்பிடம், வழிபடுதல் உள்ளிட்டவைகளுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கி வரும் சுதந்திர உரிமையை பறிக்கும் செயலே கடந்த காலங்களில் மேலோங்கி வந்துள்ளது. இத்தகைய போக்கு இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும்" எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக இந்திய ஒன்றியெமெங்கும் பரவிவரும் இத்தகைய கூட்டறிக்கையில் இந்திய விஞ்ஞானிகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு இணைந்துள்ளனர்.

இந்திய அறிவியல் கழகம், இந்திய தொழிற்நுட்பக் கழகம், இந்தியப் புள்ளியியல் ஆய்வு நிறுவனம், அசோகா பல்கலைக்கழகத்தின் உடலியியல் அறிவியல் தேசிய மையம் உள்ளிட்ட இந்திய ஒன்றிய அளவிலான கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த 150ற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

"மக்களை சாதி, மதம், மொழி, பூகோள அடிப்படையில் பிரித்துப் பார்க்கும், எதிர்க்கும் மக்களை கொல்வதும் சித்திரவதைப் படுத்துவதுமென கொள்கை கொண்டோரை இத்தேர்தலில் கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். அதேபோல இதுவரை விஞ்ஞானிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள் என பலரும் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள், சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள், கொலைச் செய்யப்பட்டுள்ளார்கள், இதற்கெல்லாம் முடிவுரை எழுதும் தேர்தலாக இது அமையவேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

இவைகள் தொடர்ந்துவந்த வேளையில், ஏப்ரல் 5ஆம் நாள் (நேற்று), நசுருதீன் சா, அனுராக் காஷ்யாப், கொங்கனா சென் உள்ளிட்ட பிரபலமான 700ற்கும் மேற்பட்ட திரைக் கலைஞர்கள் இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

அதில், "பாஜக அரசாங்கத்தினால் இந்துத்துவக் குண்டர்கள் எவ்வித தடையுமில்லாமல் மக்களை துன்புறுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டது" என மேற்கோள் காட்டியிருந்தனர்.

இந்திய ஒன்றியத்தினை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஏதேச்சதிகாரப் போக்குடன் நடந்து வந்தது பாஜக என்பதே பரவலாக இந்திய சமூக, அரசியல்வாதிகளின் தொடர் குற்றச்சாட்டாக இருந்துவந்தது. பொதுவாக, அரசியல் மற்றும் தேர்தல் காலங்களில் பொதுவெளிக் கருத்தை இதுவரை வெளியிடத் தயங்கிய ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூட இம்முறை துணிந்து வெளிவந்து பாஜக அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை என அறிய முடிகிறது.