வடமாகாணம்

முல்லைத்தீவில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

பெருமளவானோர் பங்கேற்பு, சர்வதேசம் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் கோரிக்கை
பதிப்பு: 2019 ஏப். 07 22:41
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 08 21:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Mullaituvu
#Missingpersons
#Protest
#OMP
#Vadduvakal
#Tamils
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள், கணவன்மார் எங்கே எனக் கேட்டு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ஈழத் தமிழர் பிரதேசத்தை ஆக்கிரமித்த இலங்கை இராணுவம் வகைதொகையின்றி இளைஞர், யுவதிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்தது. அவ்வாறானதொரு நிலையில் தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை இலங்கை இராணுத்திடம் விசாரணைக்காகக் கையளித்ததாகவும் ஆனாலும் இதுவரை அவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லையெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.
 
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள், அங்கிருந்து பேரணியாக வட்டுவாகல் பாலத்தை நோக்கிச் சென்றனர்.

அங்கு ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து ஆவேசமாகக் கோசம் எழுப்பினர்.

சுலோக அட்டைகளையும், பதாதைகளையும் தமது கைகளில் ஏந்தியிருந்த மக்கள் அமைதியான முறையில் தமது கோரிக்கையை முன்வைத்தனர். சர்வதேச சமூகம் பொறுக் கூற வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனவும் உண்மையைக் கண்டறிய சர்வதேச விசாரணையே அவசியமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசம் எழுப்பினர்.

நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாதென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டனர்.

பெருமளவு இலங்கைப் பொலிஸாரும், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும் தங்களைக் கண்காணித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் பலர் தெரிவித்தனர்.