கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவலி வலயத்துக்குள் கொண்டு வந்து சிங்களக் குடியேற்றம் செய்ய முயற்சி

மாவட்ட விவசாய அமைப்புக்கள் குற்றச்சாட்டு-இனப்பரம்பல் குறைவடையுமெனவும் எச்சரிக்கை
பதிப்பு: 2019 ஏப். 08 22:45
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 08 23:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவலி வயலத்திற்குள் கொண்டுவந்து விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் முறுத்தானை, குடிம்பிமலை, பேர்லாவெளி ஆகிய மூன்று கிராம சேவகர் பகுதியையும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் ஈரளக்குளம் கிராம சேவகர் பகுதியையும் இணைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென்பகுதி சிங்கள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், உதவிகள் தமிழ் பகுதியில் வழங்கப்படவில்லை.
 
எனினும், தமது சொந்த முயற்சியினால் விவசாயிகள் தமது தொழில்களை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், உதவிகள் வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்து மகாவலித் திட்டத்தில் உள்ளவாங்க முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இலங்கை ஜனாதிபதியின் கீழ் உள்ள மகாவலி அமைச்சின் ஏற்பாட்டில் காணிகள் சுவீகரிக்கப்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதி எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கூடுதலான காணிகள் காணி உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்படவுள்ளதாக இரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயங்கிவரும் விவசாய அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியமடு, புணானை கிழக்கு மற்றும் கோறளைப்பற்று தென்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடைகளின் மேச்சல்த்தரை பகுதி மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதனால் சிங்கள மக்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நெற் செய்கை காணிகள் சுவீகரிப்புச் செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒருவருக்கு ஒரு கண்டம் (இரண்டரை ஏக்கர் அளவுத் திட்டம் பிரயோகிக்கப்பட்டது.)

அத்துடன், தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதியின் கீழ் உள்ள மகாவலி அமைச்சின் ஏற்பாட்டில் காணிகள் சுவீகரிக்கப்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதி எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

2007ஆண்டு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதிகள் நன்கு திட்டமிட்ட முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சிப்பது சிங்களக் குடியேற்றத்தின் உள்நோக்கத்தை வெளிக்காட்டுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

போர்க்காலங்களிலும், அதன் பின்னரான காலங்களிலும் மகாவலியின் 75 சத வீதமான நிலப்பரப்புக்கள் சிங்கள மக்களுக்கும் முஸ்ஸிம் சமூகத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதில் இரண்டு வீதம் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டாலும். கிழக்கு மாகாணத் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை.

இந்த நிலையில் மகாவலித் திட்டத்தை அமுல்படுத்துவதனால் தற்போது பாவனையில் உள்ள காணிகள் மேலும் துண்டாடப்படும் ஆபத்தான நிலை ஏற்படவுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தமிழ் மக்களின் இனப்பரப்பல் மேலும் குறைவடையலாமெனவும் விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் இலங்கை வனவள அதிகாரிகள் கனிசமான நிலப்பரப்புக்கு எல்லைக் கல் போடப்பட்டு விவசாயக் காணிகள் மற்றும் சில குடியிருப்புக் காணிகளை தம்வசம் வைத்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் மாத்திரமல்ல காட்டுத் தொழில் (விறகு வியாபாரம் செய்பவர்கள்) செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.