இலங்கையின் அரசியல் குழப்பங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியிலும்

கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்காவின் இரண்டு போர்க் கப்பல்கள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருகை

பிராந்திய பாதுகாப்புகளை வலுப்படுத்துவதே பிரதான நோக்கம் என்கிறது அமெரிக்கத் தூதரகம்
பதிப்பு: 2019 ஏப். 18 23:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 19 00:25
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் தற்போது பிரதான சிங்களக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கைக் கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவடுவதற்காக அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று வியாழக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் (USNS Millinocket), யு.எஸ்.எஸ் ஸ்ப்ருவன்ஸ் (USS Spruance), ஆகிய இரண்டு போர்க்கப்பல்களே இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளன.
 
இந்தப் போர்க்கப்பல்கள் இரண்டும் இலங்கை கடற்படையின் மரபு வழி முறைகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டன. இரு நாட்டு கடற்படை உயர் அதிகாரிகளும் வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றினர்.

குறிப்பாக இலங்கைக் கடற்படையின் செயற்பாட்டுத் தளபதி சஞ்ஜீவ டயஸ் (Sanjeewa Dias), கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் லெப்ரினன்ட் கொமான்டர் பிறையன் படேஜ் (Brian Padge) ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர்க்கப்பல் இரண்டாயிரத்து 362 தொன் நிறையும் ஆயிரத்து 55.3 மீட்டர் நீளமும் கொண்டதாகும். யு.எஸ்.எஸ் ஸ்ப்ருவன்ஸ் கப்பல் தொள்ளாயிரத்து 580 தொன் நிறை கொண்டதாகும்.

இந்தப் போர்க்கப்பல்கள் இரண்டும் இலங்கைக் கடற்படை கப்பல்களுடன் இணைந்து இலங்கைக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.

கறேற் (CARAT-2019) என்ற அமெரிக்க இலங்கை கூட்டுக் கடற்படைப் பயிற்சியே நடைபெறவுள்ளன. எஸ்.எல்.என்.எஸ் சயூறலா (SLNS Sayurala), எஸ்.எல்.என்.எஸ் சமுத்திரா (SLNS Samudura) என்ற இரு இலங்கைக் கடற்படையின் இரு கப்பல்களும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் இடம்பெறும் கடற்படைப் பயிற்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காகவே இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களும் வருகை தந்துள்ளதாக இலங்கைக் கடற்படையும் கூறியுள்ளது.

இலங்கையுடன் இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு அடிப்படையிலும், இலங்கையுடனான நல்லுறவின் நோக்கிலும் கொள்கையளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீன அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடந்த சில வருடங்களாக அமெரிக்கா. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வரும் நிலையில், அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக் கூடிய ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டுமெனச் சென்ற ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்புக்கு வருகை தந்திருந்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.