வடமாகாணம்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் இடிமின்னல்- விசுவமடு, புத்தடியில் மாணவன் உயிரிழப்பு மற்றொருவர் காயம்

சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரு தென்னை மரங்கள் எரிந்தன
பதிப்பு: 2019 ஏப். 19 21:18
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 19 23:21
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணத்தில் கடுமையான வெப்பத்தின் பின்னர் தொடர்ச்சியாக இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுன்னாகம் குப்பிளான் தெற்கு மயிலங்காடு பிரதேசத்தில் இடிமின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இன்று முல்லைத்தீவு விசுவமடு, புத்தடிப் பிரதேசத்தில் பிற்பகல் மூன்று மணியளவில் இடி மின்னல் தாக்கி 18 வயதான மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு மாணவன் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ் நகரில் மணற்தரை ஒழுங்கைக்கு அருகில் உள்ள சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
 
யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

முல்லைத்தீவு விசுவமடு, புத்தடிப் பிரதேசத்தில் இடி மின்னல் தாக்கியதில் தொட்டியடி விசுவமடுவைச் சேர்ந்த 18 வயதான தர்மபாலசிங்கம் தயானந்தன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் விசுவமடு மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவு மாணவரென உறவினர்கள் கூறுகின்றனர்.

கணேசமூர்த்தி கிரிசன் என்ற மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் மழை பெய்ய ஆரம்பித்ததும் வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றபோது மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவன் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்திசாலைத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இடிமின்னல் தாக்கம் தொடர்ச்சியாக இடம்பெறலாமெனவும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மீண்டும் அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு. வடமத்திய மாகாணங்களில் கூடுதல் மழை பெய்யுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.