வடக்கு- கிழக்கில் தமிழ் ஊடகத்துறையின் சுதந்திரம்- முல்லைத்தீவில்

விசாரணையின் பின்னர் தமிழ் ஊடகவியலாளர் பொலிஸாரால் கைது

இலங்கைக் கடற்படை அதிகாரியின் பொய்யான முறைப்பாடென ஊடகவியலாளர்கள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஏப். 20 15:48
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 20 17:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு மேற்கொண்ட பொய்யான முறைப்பாட்டில் தவசீல்ன் கைது செய்யப்பட்டுள்ளதாக சக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடக்கு கிழக்கில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த 07.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திருந்தனர். அப்போது செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் படம் எடுத்தார்
 
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் அவர் அச்சுறுத்தினார். இவருடைய செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர் தவசீலன் குறித்த அந்த நபரிடம் கேள்வி கேட்டார்.

ஆனால் எதையும் கூறாமல் அந்த நபர் தப்பியோடிவிட்டார். ஆனாலும் பொது மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட அந்த நபரை விசாரித்தபோது, தான் இலங்கைக் கடற்படை அதிகாரியெனக் கூறியுள்ளார்.

இதன் காரணத்தினாலேயே தவசீலன் இலங்கைப் பொலிஸாரால் சென்ற 18 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். நேற்று வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமையும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேர விசாரணையின் பின்னர் தவசீலன் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வடக்கு- கிழக்கில் ஈழத் தமிழரின் பிரச்சினையை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்க்ள் திட்டமிடப்பட்டு அச்சுறுத்தப்படும் நடவடிக்கைகள் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஊடக அமைப்புகள் பல தடவை கண்ட அறிக்கைகளை வெளியிட்டதுடன் இலங்கை அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமும் முறைப்பாடும் செய்திருந்தனர்.

இ்வ்வாறானதொரு நிலையில் தவசீலன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் படம் எடுத்த அந்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த தவசீலன் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பொலிஸார் அங்கு வருகை தரவில்லை.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் சிலருடன் வட்டுவாகல் பிரதேசத்தில் உள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு குறித்த நபரை அழைத்து சென்று அவர் கடற்படை அதிகாரியா என தவசீலன் கேட்டுள்ளார்.

குறித்த நபர் இலங்கைக் கடற்படை அதிகாரியென முகாமில் இருந்த உயர் அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தினர். அதனையடுத்து குறித்த நபரை அந்தக் கடற்படை முகாமில் கையளித்துவிட்டு தவசீலனும் கூடச் சென்ற மக்களும் திம்பிவிட்டனர்.

இந்த ஆத்திரத்தினால், ஊடகவியலாளர் தவசீலன் மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, முல்வைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் பணிபுரியும் குறித்த அந்தக் கடற்படை அதிகாரி முல்லைத்தீவில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தவசீலன் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லை.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்று மாலை நிறுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாணை நடைபெறவுள்ளது.