இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு

குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் கொழும்பில்

இந்திய, அவுஸ்திரேலிய புலனாய்வு நிபுணர்களும் வரவுள்ளதாக அறிவிப்பு
பதிப்பு: 2019 ஏப். 22 23:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 22 23:53
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தலைநகா் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு அமெரிக்கப் படைத்துறைப் புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை கொழும்பு வந்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள், அதற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளுக்கு உதவியளித்து வருவதாக இலங்கைப் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ கொழும்பில் செய்தியாளர்ளிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்த்திரேலியப் படையின் புலனாய்வுத் துறை நிபுணர்களும் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வரவுள்ளதாகவும் ஹேமசிறி பெர்னான்டோ கூறியுள்ளார்.
 
சர்வதேசப் புலனாய்ப்பு பிரிவினரும் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வரவுள்ளதாகவும் கூறிய அவர், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பேசியதன்படி வெளிநாடுகளின் படைத்துறைப் புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, அமெரிக்கப் புலனாய்வுத் துறை நிபுணர்களோடு சேர்ந்து இந்தியப் புலனாய்வு உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு வரவுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இந்தியப் புலனாய்வு உயர் அதிகாரிகள் வரவுள்ளமை தொடர்பாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஊடகங்களுக்கு எதுவுமே கூறவில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் உயர்மட்ட அரசியல்வாதிகள் சிலரும் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் வேறு சில முஸ்லிம் உயர்மட்ட அரசியல்வாதிகளும் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் குண்டுவெடிப்பில் 290 பேர் கொல்லப்பட்டும், ஐநூறுபேர் காயமடைந்துமுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 52 பேர் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.