உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இரு வாரங்களின் பின்னர்

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

ஆராதனைகள் மாத்திரமே பூஜைகள் தற்போதைக்கு இல்லையெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2019 மே 07 23:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 09 20:50
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#Colombo
#St.
#Anthony'sShrine
#Kochchikade
#lka
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்புக் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலை ஏழு மணிக்குத் திறக்கப்பட்ட ஆலயம், இரவு ஏழு மணிக்கு மூடப்பட்டது. இலங்கைக் கடற்படையினரால் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டுள்ள அந்தோனியார் ஆலயம், இன்றிலிருந்து தினமும் குறிக்கப்பட்ட சில மணித்தியாலங்கள் ஆராதனைகள் இடம்பெறும் என்றும், பூஜைகள் தற்போதைக்கு இடம்பெறாதெனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஆலயத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.
 
இலங்கை முப்படையினரும் ஆலயத்திற்கு அருகாகவுள்ள வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சோதனை, தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

இன்று ஆலயம் ஆராதனைக்காகத் திறக்கப்பட்டபோதும் மிகவும் குறைந்தளவு மக்களே வருகை தந்தனர். ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் சுற்றளவில் வாகனங்கள் தரித்து நிற்க அனுமதியளிக்கப்படவில்லை.

அந்தோனியார் ஆலயத்தின் உட்பக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் உடைகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தோனியார் ஆலய நிர்வாகம் கூறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று அந்தோனியார் ஆலயத்தின் முற்பக்கமாக மக்கள் வெளியேறும் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சுமார் 135 பேர் கொல்லப்பட்டும் 110 பேர் காயமடைந்துமுள்ளமை குறிப்பிடத்தக்கது.