இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்

தூதுவர் றொபேட் ஓ பிளேக் கோட்டாபய ராஜபக்சவை பாராட்டினார்

உயர்மட்டக்குழுவை அமைத்து புலனாய்வுத் தகவல்களை பரிமாறியதாகவும் கூறினார்
பதிப்பு: 2019 மே 08 10:17
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 11 22:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#RobertOBlake
#MahindaRajapaksa
#MaithripalaSirisena
#SarathFonseka
#Srilanka
#Eastersundayattack
#Lka
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் றொபேட் ஓ பிளேக் (Robert O. Blake) பாராட்டியுள்ளார். சீனாவை மையப்படுத்திய தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையும் இலங்கைக்கான அதன் அர்த்தமும் என்ற தொனிப்பொருளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தபோது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகத் தொழிற்றிறன் உள்ள உயர்மட்டக்குழுவை அமைத்திருந்தார். அவ்வாறான தகுதியுடைய தொழிற்றிறனுள்ள உயர்மட்டக்குழு, தற்போதைய சூழலில் இலங்கைக்கு அவசியமென அவர் வலியுறுத்தினார்.
 
அவ்வாறான தொழிற்றிறனுள்ள உயர்மட்டக் குழுவை தற்போதைய அரசாங்கமும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் றொபேட் ஓ பிளேக் ஆலோசனை கூறினார்.

தற்போதைய சூழலில் தொழிற்றிறன் மிக்க உயர்மட்டக் குழு ஒன்று செயற்படுவது, இலங்கைக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

ஏனெனில் தொழிற்றிறன் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்துத் தகவல்களைப் பெற்று, இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள புலனாய்வுக் கிளைகளுக்குக் கோட்டாபய அவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன் அந்தத் தகவல்களை உயர்மட்டங்களுக்கும் பகிர்ந்து தாக்குதல் நடப்பதை கோட்டாபய ராஜபக்ச தடுத்ததாகக் கூறிய றொபேட் ஓ பிளேக், அவ்வாறான உயர்மட்டப் பொறிமுறை ஒன்றை அமைத்து, எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

2001 ஆம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாகவும் விபரித்த றொபேட் ஓ பிளேக், அந்தத் தாக்குதலுக்கு முன்னரான காலத்திலும் அதன் பின்னரான சூழலிலும் அமெரிக்கா செய்த தவறுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பாடம் கற்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாகவும் அதன் பின்னரான இலங்கையின் பாதுகாப்பற்ற நிலைமை குறித்தும் றொபேட் ஓ பிளேக் கடந்த காலத்தை நினைவூட்டிக் கூறும்போதே கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் பற்றிப் புகழாரம் சூட்டினார்.

றொபேட் ஓ பிளக் கொழும்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றிய போதே நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறான காலப்பகுதியில் சமாதானப் பேச்சுக்களைக் குழப்பும் வகையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பாக்கிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களும் சில வெளிநாட்டுச் சக்திகளும் கிழக்கு மாகாணத்தில் ஊடுருவிக் குழப்பங்களை விளைவிப்பதாக விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அப்போது குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் றெபேட் ஓ பிளேக் அதனை ஏற்றுக்கொள்ளாது அப்போது இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகளையே ஊக்குவித்திருந்தார்.

அதேவேளை, 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்குவதில் அமெரிக்கா இரகசிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகக் கூர்மைச் செய்தித் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகியிருந்தது.

றொபேட் ஓ பிளேக் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக 2005 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டுவரை பணியாற்றியிருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருந்ரு 2013 ஆம் ஆண்டு வரை தெற்காசிய, மத்திய தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.