வடமாகாணம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்க மறுப்பு

இலங்கைச் சட்டமா அதிபர் பரிசீலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது
பதிப்பு: 2019 மே 08 14:58
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 09 20:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிணை மனு யாழ் நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் படி இரு மாணவர்களும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் அது குறித்து பரிசீலிக்கின்றது. எனவே யாழ் நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்க முடியாதென நீதவான் பீற்றர் போல், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன், முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவரையும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் சட்டத்தரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமையினால் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கொழும்பில் இலங்கைச் சட்டமா அதிபருடன் பேசுவதாகக் கூறியிருந்தார்.

அதேவேளை, யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவேல் குருபரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகளான மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஸ் ஆகியோரும் மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

கைதான மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கைப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிக்கு ஒப்பான பொலிஸ் அதிகாரியொருவர், கைதான மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமென அவர்கள் கோரியிருந்தனர்.

ஆனால், 72 மணிநேரத்துக்குள் மாணவர்கள் இருவரையும் நீதவானிடம் முன்னிலைப்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிக்கு ஒப்பான பொலிஸ் அதிகாரியொருவர் மாணவர்களை நீதிமன்றத்தில், முன்னிலையாக்க வேண்டுமென்ற அவசியம் இல்லையென இலங்கைப் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டுமிருந்தது.

யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில், மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.