உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

அமெரிக்க, இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் ஆலோசனை

மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு - மைத்திரி மீது சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 மே 09 10:35
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 11 03:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EaterAttacklk
#Srilanka
#Bombblast
#SarathFonseka
#lka
#MaithripalaSrisena
#MahindaRajapaksha
எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற நகரங்களில், குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளதென்று தகவல் கிடைத்துள்ளதாக பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், இது தொடர்பாகத் தன்னிடம் கூறியதாகவும் இந்த ஆபத்துத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமெனவும், சரத் பொன்சேகா வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்களில் குண்டுவெடிக்கவுள்ளதாக இந்தியப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததை, 15 தடவைகள் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி மைத்திரியிடம் கூறியிருந்தார்.
 
ஆனால் ஜனாதிபதி அதனைக் கருத்தில் எடுக்கவில்லையெனவும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

இந்த விடயத்தை ஹேமசிறி பெர்னாண்டோ பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகியதும் தன்னிடம் கூறிக் கவலை வெளியிட்டதாகவும், சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை, கொழும்பில் குண்டுகள் வெடிக்கும் எனக் கிடைத்த தகவலுக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது ஜனாதிபதியின் கடமை என்றும், அரசாங்கத்துடன் கலந்துரையாடி பாதுகாப்புகளை மேற்கொள்ளுமாறும் சரத் பொன்சேகா கேட்டுள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகாவின் உரைக்குப் பின்னர், கருத்து வெளியிட்ட மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

இதேவேளை, இலங்கைப் பாதுகாப்புச் சபையை மீண்டும் கூடி ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் மேலும் குண்டுகள் வெடிக்கலாமென புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புச் சபையைக் கூட்டவுள்ளதாகவும், முரண்பாடுகளைத் தவிர்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் மைத்திரியும் ரணிலும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு, இல்லையென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருக்கும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேசப் புலனாய்வு அதிகாரிகளும் இலங்கைப் புலனாய்வு உயர் அதிகாரிகளோடு இணைந்து தீவிரமாகச் செயற்படுவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அமெரிக்க, இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் செயற்படுவதற்கு, மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த தரப்பு நிலைப்பாட்டை ஏற்றுச் செயற்படுவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை குண்டுகள் வெடிக்கலாமென இலங்கைச் சுற்றுலாத்துறை அதிகாரசபை சென்ற திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தது.