உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் கைதான

ஒன்பது சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை - விசாரணை ஆரம்பம்

மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது சந்தேகம் - எட்டு மணிநேர வாக்குமூலம்
பதிப்பு: 2019 மே 10 23:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 12 17:41
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Easterattacksl
#Srilanka
#lka
#Bail
#Srilankapolice
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறித்து இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்குச் சொந்தமான, செப்புத் தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டு அங்கு பணியாற்றிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஆனால் அந்த ஒன்பது பேரும் சில நாட்களிலிலேயே பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் எவ்வாறு, எந்த அடிப்படையில் விடுதலையானார்கள் என்பது குறித்து கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட பொலிஸ் குழு தீவிரமாக விசாரணை நடத்துகின்றது.

இலங்கைக் குற்றத்தடுப்புப் பிரிவின் கொழும்புக்கான பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் விதுர ஜயசிங்க, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பியல் குணதிலக ஆகியோரிடமே இந்த விசேட பொலிஸ் குழு விசாரணை நடத்தியுள்ளது.

இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக எட்டு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசேட பொலிஸ் குழுவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெவன் டி சில்வா தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ஒன்பது பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜே.வி.பி உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் சென்ற புதன்கிழமை கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர்கள் அமைதியாக இருந்தனர்.

மகிந்த தரப்பு உறுப்பினர்களும் இந்த ஒன்பது பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாகக் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் கொடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் காப்பாற்றப்படுவதாகவும் இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் மன்றத் தலைவர், பதுளை மறை மாவட்ட ஆயர் ஜே.வின்ஸ்டன் பெர்னாந்து, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கூறியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திருந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் மன்றம், சந்தேகிக்கப்படும் சில அமைச்சர்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கம் இதுவரை விசாரணை நடத்தாது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

அதேவேளை, வவுனியா கனகராயன்குளத்தில் ஹோட்டல் ஒன்றில் ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்பட்டு கடந்த 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அந்த ஹோட்டல் உரிமையாளரும் இலங்கைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் தென் மாகாணம் அம்பாந்தோட்டையில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் நெருங்கிய உதவியாளர் ஒருவரை விடுதலை செய்ய சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்கள் வரை கப்பம் கோரப்பட்டிருந்தது.