உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபரை விடுதலை செய்யுமாறு கேட்டதாக

இலங்கை இராணுவத் தளபதி கூறியதை மறுக்கிறார் ரிஷாட்

தெஹிவளையில் ஒருவர் கைது செய்யப்பட்டாரா என்று மாத்திரமே கேட்டதாகவும் கூறுகின்றார்
பதிப்பு: 2019 மே 17 14:35
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 17 21:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு தெஹிவளைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் பாதியுதீன் மூன்று தடவைகள் தொலைபேசியில் கேட்டிருந்தாக இலங்கை இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு எவரையும் விடுதலை செய்யுமாறு கோரவில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மறுத்துள்ளார். இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்காவுடன் தொலைபேசியில் உரையாடியது உண்மை. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எவரையும் விடுதலை செய்யுமாறு கோரவில்லையெனக் கூறியுள்ளார்.
 
தெஹிவளைப் பிரதேசத்தில் கைதான ஒருவர் இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருக்கின்றாரா? இல்லையா? ஏன்றுதான் கேட்டதாகவும் அவரை விடுதலை செய்யுமாறு இராணுவத் தளபதியிடம் கோரவில்லையெனவும் ரிஷாட் பதியுதீன் விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தெஹிவளைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்தச் சந்தேகநபரை விடுதலை செய்யுமாறு ரிஷாட் பதியுதீன் மூன்று தடவைகள் தன்னிடம் கேட்டிருந்தாக மகேஸ் ரட்னாயக்கா நேற்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆனால் அழுத்தங்கள் கொடுக்கவில்லையெனவும் அப்படி விடுதலை செய்யுமாறு கேட்பது அவருடைய உரிமை என்றும் மகேஸ் ரட்னாயக்கா தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த ரிஷாட் பதியுதீன், அமைச்சர் என்ற முறையில் நீர்கொழும்பில் உள்ள முஸ்லிம் மக்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதுகாப்புத் தொடர்பாகப் பேசியதாகவும், இதனால் நீர்கொழும்பில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறு இராணுவத் தளபதியிடம் கேட்டிருந்ததாகவும் கூறினார்.

நீர்கொழும்பில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்படும் போது வன்முறைகள் ஏற்படலாமென முஸ்லிம் மக்கள் தன்னிடம் கூறியதாலேயே இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்புத் தொடர்பாகப் பேசியதாகவும் ரிஷட் பதியுதீன் விளக்கமளித்திருந்தார்.

கைதான சந்தேக நபர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து ஏனைய முஸ்லிம் அமைச்சர்களிடமும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கேட்டதாகவும் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.