ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் ஒரு தசாப்த நினைவு

ஆயிரக்கணக்கான உள்நாட்டவர்களுடன் வெளிநாட்டவர்களும் பங்கேற்பு
பதிப்பு: 2019 மே 18 11:48
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மே 18 14:18
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Mullivaikal
#TamilGenocide
#Remembarance
#Lka
#Srilanka
#Lastwar
ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டு ஒரு தசாப்தம் நிறைவடைந்துள்ள நிலையில், 10 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்பூர்வமாக இடம்பெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் ஓரங்கட்டப்பட்டு சர்வதேச நாடுகளின் துணையுடன் இலங்கையின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து, மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது.
 
சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நினைவேந்தல் திடலில் கொளுத்தும் வெயில்ல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இன அழிப்பு போரின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனை அடுத்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச் சுடரை இறுதிப் போரின் போது தனது தாய் எறிகணை வீச்சுக்கு இலக்காகி இறந்துவிட்டார் என்று தெரியாமல் தாயின் மர்பில் பாலருந்திக் கொண்டிருந்த சிறுமி ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தமது உறவுகளை இழந்து இன்றுவரை நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் உறவுகள் தமது உறவினர்களை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மதகுருமார் மலர் அஞ்சலி செலுத்தியதை அடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம் என்ற தொனிப் பொருளில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நிறுவி, வடக்கு- கிழக்கு இணைந்த தமிழர் இறைமை, தன்னாட்சி அதிகாரத்துடன் தமிழர் தாயகத்தை நிலை நிறுத்தும் வகையில் பிரகடணம் அமைந்திருந்தது.

நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சைவ, கிறித்தவ மதகுருமார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டவர்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரன் காலை 6 மணியளவில் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

'எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர்தூவி அஞ்சலித்தேன்' என அஞ்சலி வணக்கத்தின் பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.