உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி நம்பிக்கையில்லாப் பிரேரணை

முன்கூட்டியே தெரிந்திருந்தும் உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறியதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 மே 21 11:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 21 21:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Easterattacklka
#SrilankaGovernment
#JVP
#UNP
#SLFP
#Slparliament
#Noconfidencemotion
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை தடுத்த நிறுத்தத் தவறியதனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனக் கோரி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஜே.வி.பி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார். ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்திடம் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் பலர் இலங்கைக்கு வந்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆகவே முன்கூட்டியே தெரிந்திருந்தும் ஏன் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லையென பிரேரணையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் அரசாங்கம் அக்கறையீனமாக இருந்துள்ளது. முற்கூட்டியே கவனம் செலுத்தியிருந்தால் தாக்குதல்களைத் தடுத்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் ஒற்றையாட்சி அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளதெனப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஸக்ரானுடன் ஏற்பட்ட தகராறு ஒன்றில் மூவர் படுகாயமடைந்திருந்தனர். அப்போது கூட சரியான முறையில் விசாரணை நடத்த அரசாங்கம் தவறியுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் முஸ்லிம் அரசியல்வாதியொருவரின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் காசீம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆகவே தற்கொலைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளது. எனவே தோல்வி கண்ட அரசாங்கம் என்பதால் பதவி விலக வேண்டுமென ஜே.வி.பி தமது பிரேரணையில் கூறியுள்ளது.

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு 21 நாட்களின் பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்கள், பள்ளிவாசல்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில் தாக்குதல் இடம்பெற்றது எவ்வாறு என்றும் பிரேரணையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை மீது விவாதம் நடத்துவதற்கான திகதி பின்னர் தீர்மானிக்கப்படுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.