உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலை

ஞானசார தேரரைச் சிறையில் பார்வையிட்டார் மைத்திரி!

ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென அழுத்தம் - ரணிலும் கேட்டுள்ளார்
பதிப்பு: 2019 மே 21 23:17
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 22 10:02
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#SriLanka
#GnanasaraThero
#Rizardbadurdeen
#RanilWickremesinghe
#MaithripalaSirisena
#lka
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலை அடுத்து சிங்கள அரசியல் கட்சிகளிடையே பலத்த முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்துள்ளன. கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது. அதேவேளை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
 
ஆனால் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டிய அவசியமில்லையென ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சர்களுக்கே கூறியுள்ளார். இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன பதவி விலகுமாறு கோரியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று செவ்வாய்க்கிமை இரவு கிடைத்த தகவல்களின் படி அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு ரணில் விக்கிரமசிங்க ரிஷாட் பதியுதீனிடம் கேட்டுள்ளார் என்றும் பிரச்சினைகளைத் தவிர்க்குமாறு கேட்டுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை கொழும்பு - வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 19 ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன தேரரைச் சந்தித்து உரையாடியதாகவும், விரைவில் தேரர், பொது மன்னிப்பில் விடுதலை பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வெசாக் பண்டிகையன்று சமூகவிரோதக் கைதிகள் 734 பேர் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அந்த வைபவத்தில் கலந்துகொள்ள சிறைச்சாலைக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன, அத்தே ஞானசார தேரரோடு சிறிது நேரம் உரையாடியதாகவே கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆறு ஆண்டுகள் சிறைத் தன்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் விடுதலை செய்யுமாறு பொதுபலசேனா உட்பட சிங்கள இனவாத அமைப்புகளும், மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியும் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிறிஸ்தவ அமைச்சர்கள். கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள கிறிஸ்தவ உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பதவி விலக்குமாறு ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லா ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவருடைய கட்சியில் இருந்து விலகவுள்ளதாக அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரணில் அரசாங்கத்தில் பங்காளிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.